2013-11-20 15:36:55

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ.,20,2013. இவ்வாரம் உரோம் நகரில் செவ்வாய் இரவு முழுவதும் ஒரு விநாடிகூட விடாமல் மழைபெய்துகொண்டேயிருக்க, இது புதனன்று காலையிலும் தொடர்ந்து, திருப்பயணிகளுக்கு, குறிப்பாக திருத்தந்தையின் புதன்பொதுமறைபோதகத்தில் பங்குபெற வருபவர்களுக்கு இடையூறாக இருக்குமோ என்ற அச்சமும் மேலோங்கி இருந்தது. ஆனால், புதன் காலையோ, மழைக்குரிய எவ்வித அடையாளமும் இன்றி மிதமான பிரகாசத்துடன் இருக்க, திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கையில் வரும் 'பாவமன்னிப்பு' குறித்து வரிகளை மையமாக வைத்து கடந்த வாரம் உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாரமும் அதனைத் தொடர்ந்தார்.
இவ்வாரமும் நான் பாவமன்னிப்பு குறித்த என் சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதுவும், இயேசு தன் சீடர்களிடம் ஒப்படைத்த பணியின் விவிலிய அடையாளமாக நிற்கும் 'திறவுகோலின் வல்லமை' யுடன் தொடர்புபடுத்தி என் கருத்துக்களை வழங்குகிறேன். உயிர்த்த இயேசு தன் திருத்தூதர்கள் மீது பொழிந்த தூய ஆவியே பாவமன்னிப்பிற்கான ஆதாரம் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதன் வழி, அவர் தன் திருஅவையை, திறவுகோலின், அதாவது, தன் வல்லமையின் பாதுகாவலனாக நியமித்தார். அதேவேளை, திருஅவையானது மன்னிப்பின் தலைவன் அல்ல. மாறாக அதன் ஊழியன். திருஅவை நம்மோடு நம் வாழ்வு முழுவதும் நம் மனந்திரும்பலின் பாதையில் ஒன்றிணைந்து பயணம் செய்து, தன்னுடைய ஒன்றிப்பு, மற்றும் திருஅவைக்கூறுகளில் ஒப்புரவின் அனுபவத்தைப்பெற நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் நம் பாவமன்னிப்பை குருவின் மூலம் பெறுகிறோம். குருவின் பணியின் வழியாக, இறைவன், திருஅவையின் பெயரால் நமக்கு மன்னிப்பைக் கொணரும் ஒரு சகோதரரைத் தந்துள்ளார். திருவருட்சாதனங்களின் பணியாளர்களாக இருக்கும் குருக்களும், தங்களுக்கும் மன்னிப்பும் குணமளிப்பும் தேவையாக உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டு, தங்கள் பணிகளைத் தாழ்மையுடனும், கருணையுடனும் ஏற்று நடத்தவேண்டும். ஆகவே, இறைவன் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை எப்போதும் நினைவுகூர்வோம். இந்த ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் உண்மையாகவே உயர்வாக மதிப்பதோடு, மன்னித்துக் குணப்படுத்தும் இந்தக் கொடை குறித்து மகிழ்வு கொள்வோம். குருக்களின் பணி மூலம் இது நமக்குக் கிட்டுகிறது.
இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.