2013-11-20 15:47:13

தியானயோக துறவு சபையினருக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள்


நவ.20,2013. சமுதாயத்தில் வெளிப்படையாக மறைப்பணி செய்யாமல், நான்கு சுவர்களுக்குள் எப்பொழுதும் வாழ்ந்து, செபத்திலும், மௌனமான பணியிலும் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இருபால் துறவுசபையினருக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னைமரியா ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான நவம்பர் 21ம் தேதியன்று தியானயோக துறவு சபையினரின் நாள் சிறப்பிக்கப்படுவதை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இச்சபைகளின் உறுப்பினர்களின் சாட்சிய வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் எனவும் கூறினார்.
மேலும், இவ்விழா நாளான இவ்வியாழன் மாலை, உரோம் Aventine குன்றிலுள்ள Camaldolese தியானயோக துறவு இல்லம் சென்று அத்துறவியருடன் சேர்ந்து மாலை திருப்புகழ்மாலை செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று கத்தோலிக்கத் திருஅவையில் 105 ஆண் தியானயோக துறவு இல்லங்களில் 12,876 துறவியரும், 3,520 பெண் தியானயோக துறவு இல்லங்களில் 48,493 துறவியரும் உள்ளனர். இந்த இல்லங்களில் மூன்றில் இரண்டு ஐரோப்பாவில் உள்ளன என வத்திக்கானில் வெளியிடப்பட்ட அண்மை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.