2013-11-20 15:51:39

ஜப்பான் கத்தோலிக்கருக்கு நம்பிக்கை ஆண்டு நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது, நாகசாகி பேராயர்


நவ.20,2013. ஜப்பானில் கத்தோலிக்கருக்கு நம்பிக்கை ஆண்டு நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும் போதனைகளும் பல கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மீண்டும் கண்டுணர உதவியுள்ளன எனவும் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami கூறினார்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Takami, திருத்தந்தை ஜப்பானுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைப்புவிடுத்ததாகவும் கூறினார்.
இந்நம்பிக்கை ஆண்டில் தனது மறைமாவட்ட மக்கள் திருவருள்சாதனங்களை, குறிப்பாக, ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறவும், நீசேயா விசுவாச அறிக்கையை அடிக்கடிச் சொல்லவும் அழைப்புவிடுத்ததாகவும் கூறினார் பேராயர் Takami.
ஒசாகாவில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன எனவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்நம்பிக்கை ஆண்டுக்கானச் சிறப்பு செபம் சொல்லப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் மறைமாவட்ட பேரவைக்குத் தயாரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார் பேராயர் Takami.
பிரான்சில் பிறந்த அருள்பணியாளரும், பின்னாளில் ஜப்பானின் ஆயருமாகப் பணியாற்றிய Thadée Bernard Petitjean என்பவருக்கும், ஜப்பானிய பேரரசரின் அடக்குமுறைக்குப் பயந்து 200 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்து வாழ்ந்த ஜப்பானிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றதன் 150ம் ஆண்டு நிறைவு, 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருப்பதையும் பேராயர் Takami விளக்கியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.