2013-11-20 15:53:40

அமெரிக்காவில் வாழும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு TPS தங்கும் அனுமதி வழங்கப்படுமாறு அமெரிக்க ஆயர் வேண்டுகோள்


நவ.20,2013. பிலிப்பீன்சை அண்மையில் தாக்கிய ஹையான் கடும் புயலில் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் பொருள்சேதங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பிலிப்பீன்ஸ் குடிமக்களுக்கு TPS எனப்படும் தற்காலிக பாதுகாப்புச் சமூகநிலை வழங்கப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் அரசு அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவின் தலைவர் Seattle துணை ஆயர் Eusebio Elizondo அந்நாட்டு அரசுக்கு இத்திங்களன்று எழுதிய கடிதத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைக்கு உறுதியளிக்கும் சட்டரீதியான தங்கும் அனுமதியை பிலிப்பீன்ஸ் நாட்டுக் குடிமக்களுக்கு வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள், அரசியல் பதட்டநிலை, சுற்றுச்சூழல் பேரிடர் மற்றும் பிற அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறும் நாடுகளின் குடிமக்களுக்கு இத்தகைய தங்கும் அனுமதியை அமெரிக்க அரசு வழங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அண்மை விபரங்களின்படி, பிலிப்பீன்சைத் தாக்கிய ஹையான் கடும் புயலில் ஏறக்குறைய நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் மொத்தத்தில் ஒரு கோடியே நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.