2013-11-19 15:22:15

திருத்தந்தை பிரான்சிஸ், தனது முதல் மறைத்தூது அறிவுரை ஏட்டை வெளியிடவுள்ளார்


நவ.19,2013. இம்மாதம் 24ம் தேதி நிறைவடையும் நம்பிக்கை ஆண்டின் முத்தாய்ப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முதல் "மறைத்தூது அறிவுரை" ஏட்டை வெளியிடவுள்ளார் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வருகிற ஞாயிறன்று நிகழ்த்தும் நம்பிக்கை ஆண்டின் நிறைவுத் திருப்பலியில் இவ்வேட்டை அடையாளப்பூர்வமாக 36 பேருக்கு வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ். லாத்விய நாட்டு ஓர் ஆயர், டான்சானிய நாட்டு ஓர் அருள்பணியாளர், ஆஸ்திரேலிய நாட்டு ஒரு தியாக்கோன், இன்னும், ஒரு குடும்பத்தினர், இருபால் துறவியர், வேதியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர் இளையோர், முதியோர், நோயாளிகள் என மொத்தத்தில் 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
"Evangelii Gaudium" அதாவது "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பிலான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை இம்மாதம் 26ம் தேதி செவ்வாயன்று திருப்பீட நிருபர் கூட்டத்தில் வெளியிடப்படும் என, நற்செய்தியை புதியமுறையில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.
இந்த மறைத்தூது அறிவுரையில், நற்செய்தியை புதியமுறையில் அறிவிப்பது குறித்து கடந்த அக்டோபரில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றப் பரிந்துரைகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்தக் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.