2013-11-19 15:31:41

இந்தியாவில் மகளிருக்கென இயங்கும் அரசின் முதல் வங்கி திறப்பு


நவ.19,2013. இந்தியாவில் மகளிருக்கென இயங்கும், அரசின் முதல் வங்கியை இச்செவ்வாயன்று மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இச்செவ்வாயன்று திறக்கப்பட்டுள்ள இவ்வங்கியில் மகளிர் மட்டுமே பணியில் இருப்பர்.
பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் இந்த அனைத்து மகளிர் வங்கியின் ஏழு கிளைகள் நாடு முழுவதும் திறக்கப்படும் எனவும், 2017ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் 500 கிளைகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகளிர் வங்கியின் செயல்கள் குறித்துப் பேசிய அதன் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன், இவ்வங்கியில் ஆடவரும் மகளிரும் வங்கிக் கணக்கை வைத்திருக்கலாம், எனினும், பெரும்பாலும் மகளிரே பணம் போடவும் பணம் எடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.
வங்கிக் கணக்கு வைப்பதற்கு அதிகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மகளிருக்கு உதவியாக கிராமங்களில் இதன் கிளைகள் தொடங்கப்படும் எனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மகளிருக்கான பாரதிய மஹிலா வங்கி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கட்டா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் மஹிலா வங்கி திறக்கப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய ஒரு இலட்சம் வங்கிகள் இருந்தாலும், நாட்டின் 6,50,000த்துக்கு மேலான கிராமங்களில் பெரும்பாலானவைகளில் ஒரு வங்கிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.