2013-11-18 14:49:31

வாரம் ஓர் அலசல் – அவர்கள் சார்பாக பேசு(நீ.மொழி31,9)


நவ.18,2013. RealAudioMP3 முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால், திருத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில், ஓர் அருள்பணியாளர் உரோம் நகருக்கு ஒரு வேலையாகச் சென்றார். உரோமையில் அந்த அருள்பணியாளரின் பல திட்டங்களில் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை, தனியாகச் சந்திப்பதும் ஒன்றாக இருந்தது. அச்சந்திப்பு நாளன்று, அச்சந்திப்பு நேரத்துக்கு முன்னர் அவருக்குப் சில மணிநேரங்கள் இருந்தன. அதனால் அவர் அந்த நேரத்தில் ஒரு பசிலிக்கா ஆலயத்துக்குச் சென்று சிறிதுநேரம் செபம் செய்ய விரும்பி அங்குச் சென்றார். அந்த ஆலயப் படிக்கட்டுக்களில் பலர் தர்மம் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த அருள்பணியாளர் அந்தப் படிக்கட்டுக்களில் ஏறியபோது அவர் பார்த்த அந்த இரந்துஉண்பவர்களில் ஒருவர் அவருக்குத் தெரிந்தவர்போல் இருந்தார். அவர் அந்த ஆலயத்துக்குள் சென்று முழந்தாள்படியிட்டுச் செபித்துக்கொண்டிருந்தபோது அந்த இரந்துஉண்பவர் மீண்டும் நினைவுக்கு வந்தார். தனக்கு எப்படி அவரைத் தெரியும் என்பது நினைவுக்கு வந்ததும், உடனே ஆலயத்தைவிட்டு வெளியே வந்து அந்தக் குறிப்பிட்ட நபரிடம், எனக்கு உம்மைத் தெரியும். நாம் இருவரும் குருத்துவக் கல்லூரியில் ஒன்றாக இருந்தோமே என்று கேட்டார். அதற்கு அவர், ஆமாம் என்று தலையாட்டினார். நீங்கள் குருவானீர்கள்தானே என்று கேட்டதற்கும் அவர் ஆம், ஆனால் நான் இப்போது குரு இல்லை என்று தலையாட்டினார். பின்னர், அவர் அந்த அருள்பணியாளரிடம், தயவுசெய்து என்னைத் தனியாக விடுங்கள், தொந்தரவு செய்யாதீர்கள் என்று தலையைக் கவிழ்ந்தபடியே சொன்னார். பின்னர், அந்த அருள்பணியாளர் அவரிடம், நான் உமக்காகச் செபிக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அவர், தயவுசெய்து அதைச் செய்யுங்கள், செபத்தால் நிறைய பலன் இருக்கும் என்று பதில் சொன்னார்.
அந்த ஆலயம் சென்ற அருள்பணியாளரும் திருத்தந்தை 2ம் 2ம் ஜான் பால் அவர்களை சந்திக்கவேண்டிய நேரம் நெருங்கினதால் அங்கிருந்து வேகமாக வத்திக்கான் சென்றார். அன்று அந்த நேரத்தில் பலர் திருத்தந்தையைச் சந்தித்தனர். வழக்கமாக இச்சந்திப்பில் ஒவ்வொருவரும் திருத்தந்தையைக் கைகுலுக்கி அவரின் மோதிரத்தை முத்தி செய்தவுடன், திருத்தந்தையின் செயலர் ஒரு செபமாலையை திருத்தந்தையிடம் கொடுப்பார், திருத்தந்தை அவரைச் சந்திக்கும் நபரிடம் அதைக் கொடுப்பார். அப்போது அவரைப் பார்ப்பவர்கள் தங்களது மனதில் உள்ளதை திருத்தந்தையிடம் சொல்வார்கள். இப்படி அந்த அருள்பணியாளரும் திருத்தந்தையின் மோதிரத்தை முத்தி செய்து ஆசீர் பெற்றவுடன் அவரிடமிருந்து செபமாலையைப் பெற்றார். பின்னர், அவர் திருத்தந்தையிடம், எனது நண்பருக்காகச் செபியுங்கள் என்று சொல்லி, அவர் ஆலய வாசலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த அந்தக் குருவானவர் பற்றிச் சொன்னார். திருத்தந்தையும் கரிசனையுடன் கேட்ட பின்னர் அவரது உதவியாளரிடம் ஏதோ சொன்னதை அந்த அருள்பணியாளர் கவனித்தார். அன்று மாலையில் வத்திக்கானிலிருந்து அந்த அருள்பணியாளரின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அன்று இரவு உணவுக்கு அவரையும், அவர் திருத்தந்தையிடம் கூறிய அவரது அந்த இரந்துண்ணும் நண்பரையும் திருத்தந்தையோடு இரவு உணவருந்த அழைத்திருந்தனர். உடனே, வியப்புமேலிட, ஆர்வத்துடன் அந்த ஆலயத்துக்கு அவரைத் தேடிச் சென்றார். நல்லவேளையாக அவர் அங்கேயே அமர்ந்து அவர் தர்மம் கேட்டுக்கொண்டிருந்தார். திருத்தந்தையோடு தங்களிருவருக்கும் இரவு உணவருந்த அழைப்பு வந்திருப்பதை அவரிடம் சொன்னார் இவர். அய்யோ.. இது முடியாத காரியம், என்னைப் பாருங்கள், நான் அழுக்காக இருக்கிறேன், நான் குளித்தே பல நாள்கள் ஆகிவிட்டன, எனக்கு வேறு ஆடைகள் இல்லை என மறுப்புச் சொன்னார் அவர். உடனே அந்த அருள்பணியாளர் தான் தங்கியிருந்த பயணியர் விடுதி அறைக்கு அவரை அழைத்துச் சென்று அவரை குளிக்கச் சொல்லி, தனது ஆடைகளையும் கொடுத்து உடுத்தச் சொன்னார். பின்னர் இருவரும் வத்திக்கான் சென்றனர். அங்கு அவ்விருவரும் இனிதான வரவேற்பைப் பெற்றனர். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் திருத்தந்தை 2ம் ஜான் பால் ஏதோ செய்கையில் சொல்ல, தர்மம் எடுத்துக்கொண்டிருந்த அந்தப் குருவைத் தவிர மற்ற எல்லாரும் அந்த உணவு அறையைவிட்டு வெளியே வந்தனர். அங்கே திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும், அவரும் மட்டும் இருந்தனர். சிறிதுநேரம் கழித்து அவர் கண்ணீரோடு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். என்ன நடந்தது என அவரை அழைத்துச் சென்ற அருள்பணியாளர் கேட்டார். யாரும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. அவர் சொன்னார்....
திருத்தந்தை 2ம் ஜான் பால் என்னிடம் ஒப்புரவு அருள்சாதனம் செய்ய விரும்புவதாகச் சொன்னார். ஆனால் நான் அவரிடம், திருத்தந்தையே, என்னைப் பாருங்கள், நான் ஒரு பிச்சைக்காரன், நான் இப்பொழுது குரு இல்லை என்று சொன்னேன். அதற்கு அவர் என்னை உற்றுப்பார்த்து, எனது மகனே, ஒருமுறை குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர் எப்பொழுதும் குருவே. நம் மத்தியில் பிச்சைக்காரராக இல்லாதவர் எவர்? நானும்கூட ஆண்டவரின்முன் பிச்சைக்காரர் போல, எனது பாவங்களுக்காக மன்னிப்பைக் கேட்கிறேன் என்றார். அதற்கு நான், இப்போது திருஅவையோடு நான் நல்ல உறவோடு இல்லையெனச் சொன்னேன். ஆனால் உரோம் ஆயராகிய திருத்தந்தை அந்த நேரமே என்னை மீண்டும் குருவாக அங்கீகரித்து ஏற்றார். அத்துடன், அவர் என்னிடம் பாவசங்கீர்த்தனம் என்ற ஒப்புரவு அருள்சாதனம் செய்தார். மன்னிப்புச் செபத்துக்குக்கூட திருத்தந்தை எனக்கு உதவினார். பின்னர் நானும் அவரிடம் எனது பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருள்சாதனம் செய்தேன். அவர் எனக்கு மன்னிப்பளித்து, அவற்றுக்குப் பரிகாரமாக, எனக்கு அவர் அளித்த முதல் பணி என்னவெனில்....
நீ திரும்பிப்போய் வீடற்றவர்களுக்கும், நீ எந்த ஆலய வாசலில் தர்மம் எடுத்துக்கொண்டிருந்தாயோ அந்த வாசலிலுள்ள பிச்சைக்காரர்களுக்கும் பணி செய்..
என்பதே என்று தனக்கு நடந்ததை விளக்கினார் அவர். குருத்துவ வாழ்வை உதறித்தள்ளி, ஆலய வாசலில் தர்மம் எடுத்துக்கொண்டிருந்த அவருக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தவர் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர். இவர் 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படவுள்ளார். அன்பு நேயர்களே, கேட்பவர் நெஞ்சத்தை நெகிழவைக்கும் இந்நிகழ்வு மின்னஞ்சலில் எமக்கு வந்திருந்தது. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் அந்தக் குருவிடம் கூறியது போன்று, வீடற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், அனாதைகள் ஆகியோருக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும். பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்கள் நமது உதவிக்காகக் காத்திருக்கின்றனர். நீதிமொழிகள் நூல் பிரிவு 31, இறைச்சொற்றொடர் 9 சொல்கின்றது...
அவர்கள் சார்பாக பேசி நியாயமானத் தீர்ப்பை வழங்கு. எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.
அன்பு நெஞ்சங்களே, நவம்பர் 20 வருகிற புதனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அனைத்துலக குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கவுள்ளது. ஆயினும், இந்த அனைத்துலக குழந்தைகள் தினம், முதன்முதலில் துருக்கியில் 1920ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று சிறப்பிக்கப்பட்டது. பின்னர், 1925ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்த உலக மாநாட்டில், குழந்தைகள் தினம் ஜூன் முதல் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 1954ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், அனைத்துலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 என அறிவித்தது. ஆயினும் பல நாடுகள் பல்வேறு நாள்களில் இத்தினத்தைச் சிறப்பிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியா, இம்மாதம் 14ம் தேதி குழந்தைகள் தினத்தைச் சிறப்பித்தது. இலங்கை அக்டோபர் முதல் தேதியும், பாகிஸ்தான் ஜூலை முதல் தேதியும், ஜப்பான் மே 5ம் தேதியும், அயர்லாந்தும், இஸ்ரேலும் நவம்பர் 20ம் தேதியும்... இப்படி குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்படும் நாள், உலகில் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஆயினும் இத்தினத்தின் நோக்கம் ஒன்றே. இன்றையச் சிறார் நாடுகளின் வருங்காலத் தலைமுறைகள் என்பதால் குழந்தைகள் மற்றும் சிறாரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் எல்லாரின் நோக்கம்.
வாழ்வதற்கு, கல்வி கற்பதற்கு, நலவாழ்வைப் பெறுவதற்கு, சுதந்திரமாக வாழ, உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதற்கு சிறாருக்கு உரிமை உள்ளது. ஆனால் உலகில் ஆரம்பக் கல்வி பெறும் வயதுடைய 7 கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை. பெற்றோரின் ஏழ்மையும் எழுத்தறிவின்மையும், வேலைவாய்ப்பின்மையும் இதற்குக் காரணம். ஏமனில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்குப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பே இல்லை. வயிற்றுப்போக்கால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 8 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார், அதாவது ஒரு நிமிடத்துக்கு ஒரு குழந்தைக்கு மேல் என்ற விகிதத்தில் இறக்கின்றனர். மேலும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, முன்விரோதம் காரணமாக, மூன்று வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் கொடுமைகள் குறித்து நடந்த விசாரணையில், கடந்த அக்டோபரில் மட்டும், 70 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 30 வழக்குகள், பருவமடைந்த பெண் குழந்தைகளின் மீதான, பாலியல் பலாத்கார கொடுமைகளாகும். தெற்கு டில்லியின் வசந்த் விகார் பகுதியில், விமானப்படை அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணின், 15 மாதப் பெண் குழந்தையை, அந்த வீட்டில் வேலை பார்த்துவரும், 24 வயது ஜெகதீஷ் என்ற பணியாளன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது. பெங்களூரில் Durga Mala என்ற 11 வயதுப் பெண்ணை காவல்துறையினர் மீட்கும்போது அச்சிறுமியின் தோல் கொப்புளங்களால் நிறைந்து உடம்பில் கீறல்கள் இருந்துள்ளன.
இத்திங்கள், இஞ்ஞாயிறு தினங்களில் வெளியான செய்திகள் இவை. இன்னும், பிலிப்பீன்சில் ஹையான் புயலால் யாருமின்றி கைவிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறாரை மனித வியாபாரிகள் பயன்படுத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்பு நேயர்களே, இன்றும் எத்தனையோ சிறார் அடிப்படை உரிமைகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றனர். தினமும் இத்தகைய சிறார் பலரை, கடற்கரைகள், உணவகங்கள், குப்பைமேடுகள், பேருந்து, இரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் என பல இடங்களில் சந்திக்கிறோம். இச்சிறார் வாழ்வு மேம்பட, இச்சிறார் சார்பாக நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?







All the contents on this site are copyrighted ©.