2013-11-18 14:47:01

கற்றனைத்தூறும்... ஐ.நாவின் முதல் உலக கழிப்பறை தினம், நவம்பர் 19


இன்று உலகின் 700 கோடி மக்களில் 600 கோடிப் பேர் கைபேசி வசதியுள்ளவர்கள். ஆனால் 450 கோடிப் பேர் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் கழிப்பறை வசதி இருந்தால், ஆண்டுதோறும் இரண்டு இலட்சம் சிறாரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும். உலகில் 250 கோடிப் பேருக்குச் சுத்தமான கழிப்பறை வசதி இல்லை. 110 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளியில் காலைக்கடன்களை முடிக்கின்றனர். இந்நிலை நலவாழ்வுக்கும், உளவியல் பிரச்சனைகளுக்கும் காரணமாகின்றது. சுத்தமற்ற கழிப்பறைகள் மற்றும் சுத்தமற்ற நீர் விநியோகத்தால் ஏற்படும் நோய்களால், வளரும் நாடுகளில் ஆண்டுக்கு 26,000 கோடி டாலர் இழப்பு ஏற்படுகின்றது. தடுத்து நிறுத்தக்கூடிய வயிற்றுப்போக்கால் உலகில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 2,000 பேர் இறக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறுகிறது. எனவே உலகின் பல பகுதிகளில் கழிப்பறை வசதிகள் குறைவுபடுவதன் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏழைகள் மத்தியில் கழிப்பறை வசதிகளை அதிகரிக்கும் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், இவ்வாண்டு நவம்பர் 19ம் தேதியான இச்செவ்வாயன்று உலக கழிப்பறை தினத்தை முதல்முறையாகக் கடைப்பிடிக்கவுள்ளது. "எல்லாருக்கும் நலவாழ்வு வசதி" என்பது, ஐ.நா.வின் எட்டு மில்லென்யம் வளர்ச்சித் திட்ட இலக்குகளில் ஒன்றாகும். இந்த உலக கழிப்பறை தினம், பல்வேறு நிறுவனங்களால் 2001ம் ஆண்டில் நவம்பர் 19ம் தேதியென அறிவிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டில் 19க்கும் மேற்பட்ட நாடுகளில், நலவாழ்வு, தண்ணீர் என பல்வேறு விதமான 51க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்நாளில் நடத்தப்பட்டன. ஆனால், ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்த ஆண்டுதான் முதல்முறையாக உலக கழிப்பறை தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளது.

ஆதாரம் : இணையத்திலிருந்து







All the contents on this site are copyrighted ©.