2013-11-18 16:21:31

கர்தினால் தவ்ரான் : நாம் வாழ்வதற்கான ஓர் அர்த்தத்தை மதங்களே வழங்குகின்றன


நவ.18,2013. இறைவன் ஒவ்வொரு மனிதரிலும் உருவாக்கியிருப்பவைகளை மதிக்கத் தூண்டும், இதயத்தின் அறிவுத்திறனைச் செயல்படுத்தவேண்டும் என அழைப்புவிடுத்தார் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
ஜோர்டன் மன்னர் Abdullah Bin Abdulaziz பெயரிலான அனைத்துலக மதங்களிடையேயான மற்றும் கலாச்சாரங்களிடையேயான மையத்தின் இரண்டு நாள் கருத்தரங்கில் வியன்னாவில் இத்திங்களன்று உரையாற்றிய கர்தினால் தவ்ரான், 'மாற்றம் கண்டுவரும் ஓர் உலகில் நாம் வாழ்ந்தாலும், கடந்தகால தொடர்பின்றி நம்மால் வாழமுடியாது' என்பதை வலியுறுத்தியதுடன், இத்தகைய சூழல்களில், நாம் வாழ்வதற்கான ஓர் அர்த்தத்தை மதங்களே வழங்குகின்றன என எடுத்துரைத்தார்.
அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் மனிதர் மீதான அக்கறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது வலியுறுத்தப்படுகின்றது என்ற கர்தினால், ஒவ்வொரு மனிதரின் இனம், கலாச்சாரம், மற்றும் கண்ணோட்டங்கள் வித்தியாசமாக இருப்பது, அச்சுறுத்தலாக நோக்கப்படாமல், வளமாக நோக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
இதே கண்ணோட்டத்தில், பல்வேறு மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளும் நோக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் கர்தினால் தவ்ரான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.