2013-11-18 16:18:02

உலகில் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறும் பல கிறிஸ்தவர்களோடு செபத்தில் ஒன்றித்துள்ளேன், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.18,2013. உலகில் பல கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுகின்றனர், இக்காலத்தில் இவ்வாறு துன்புறும் மக்களின் எண்ணிக்கை முதல் நூற்றாண்டுகளில் விசுவாசத்துக்காகத் துன்புற்றவர்களைவிட அதிகம், இந்த நம் விசுவாசச் சகோதர சகோதரிகளுடன் செபத்தில் நெருக்கமாக ஒன்றித்திருப்போம் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் இறுதி நாள்கள் பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், வாழ்வின் இன்னல்களுக்கு மத்தியில் நமக்கு விசுவாசம் தேவை என்றும், கடவுளில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இன்றும் நம் உலகிலுள்ள போலி மெசியாக்கள், சுவாமிஜிக்கள் மற்றும் குறிசொல்வோரில் நம்பிக்கை வைக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், நாம் இறுதி நாளுக்காகக் காத்திருக்கும் காலத்தை, சாட்சிசொல்லும் காலமாக அமைக்குமாறு பரிந்துரைத்தார்.
நாம் முழுவதும் இறைவனின் கரங்களில் இருக்கிறோம் என்பதை நினைவில் இருத்துமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம் விசுவாசத்துக்கும், நற்செய்திக்கும் எதிரிகளைச் சந்திக்கும் நேரங்கள் சாட்சிய வாழ்வுக்கான நேரங்களாக இருக்க வேண்டும், அந்நேரங்களில் ஆண்டவரிடமிருந்து நாம் தூரமாகச் செல்லக் கூடாது, மாறாக, அந்நேரங்களில், அவரின் ஆவி மற்றும் அருளின் வல்லமையால் மீண்டும் அவரிடம் நம்மைக் கையளித்து அவரிடம் மிக நெருக்கமாகச் செல்ல வேண்டும் எனவும் மூவேளை செப உரையில் கூறினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.