2013-11-16 15:19:02

நவம்பர் 17, கற்றனைத் தூறும் - நவம்பர் 17, அகில உலக மாணவர் நாள்


பல ஆண்டுகளுக்கு முன்வரை, செக்கொஸ்லோவாக்கியா என்று அழைக்கப்பட்ட நாட்டின் மாணவர்கள், தங்கள் நாட்டில் நுழைந்த நாத்சி ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய Jan Opletal என்ற மாணவரை, நாத்சி இராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்தப் படுகொலையை எதிர்த்து, 1939ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடக்க, நவம்பர் 17ம் தேதி, நாத்சி படையினர், புகழ் மிக்க Prague பல்கலைக் கழகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கு 9 மாணவர்களையும், ஒரு பேராசிரியரையும் கொன்றனர். செக்கொஸ்லோவாக்கியாவில் இருந்த அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. 1200க்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள், கடின உழைப்பு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டத்தை ஆதரித்து, 1941ம் ஆண்டு, இலண்டனில், நவம்பர் 17ம் தேதி அனைத்துலக மாணவர் நாள் என்று கடைபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், Prague பல்கலைக் கழகத்தில் நடந்த கொலைகளின் நினைவாக, நவம்பர் 17, அகில உலக மாணவர் நாள் என்று சிறப்பிக்கப்படுகிறது.
நவம்பர் 17ம் தேதியை அகில உலக மாணவர் நாளாக ஐ.நா. அறிவிக்க வேண்டுமென்று அகில உலக மாணவர் சங்கம் கோரிக்கைகள் விடுத்துவருகிறது.








All the contents on this site are copyrighted ©.