2013-11-16 15:18:55

இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு மேலும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், பிரிட்டன் பிரதமர்


நவ.16,2103. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை அரசு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்க வேண்டும் அல்லது இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் விசாரணையை அந்நாடு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன்.
இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியை பார்வையிட்ட பின்னர் இலங்கை அரசுத்தலைவரைச் சந்தித்த கேமரூன் இந்த எச்சரிப்பை முன்வைத்தார்.
போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை அரசு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்காவிடில், இது குறித்து விசாரிப்பதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்குமாறு, வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் தான் வலியுறுத்தவிருப்பதாகக் கூறினார் கேமரூன்.
மேலும், ஏறக்குறைய 30 ஆண்டுகள் இடம்பெற்ற போருக்குப் பின்னர் இலங்கையை அதில் இருந்து மீட்டெடுக்க காலம் அவசியம். இலங்கையின் மறுவாழ்வுப் பணிகளுக்கு பிரித்தானிய தனது உதவிகளை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர்.
இதற்கிடையே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. மேலும், இது குறித்து பதில் அளித்துள்ள இலங்கை அமைச்சர் பன்சில் ராஜபக்சே, 'நாங்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும். எந்த விசாரணையையும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை,' என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.