2013-11-15 15:28:00

பிலிப்பீன்சில், காரித்தாஸ் நிறுவனங்களின் இடர்துடைப்புப் பணிகள்


நவ.15,2013. பிலிப்பீன்சில் Yolanda கடும் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், உலகிலுள்ள பிற கத்தோலிக்க இடர்துடைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்நாட்டு ஆயர் பேரவையின் CBCP செய்தி நிறுவனம் கூறியது.
23 உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட காரித்தாஸ் ஆசியா, அன்பும் செபமும், நம்பிக்கையும் நிறைந்த செய்திகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான உதவிகளையும் வழங்கி வருகின்றது. அதேசமயம், காரித்தாஸ் ஆப்ரிக்காவும் ஒருமைப்பாட்டுணர்வுமிக்க செய்திகளை அனுப்பியுள்ளது.
அத்துடன் அவை, தங்களது நிறுவனங்களின் உறுப்பினர்களையும் இடர்துடைப்புப் பணிகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளன. மேலும், காரித்தாஸ் பிரான்ஸ் மற்றும் காரித்தாஸ் ஆஸ்திரேலியாவின் உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன எனவும் CBCP செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இன்னும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் CAFOD அமைப்பு, அமெரிக்க ஆயர் பேரவையின் நிவாரண அமைப்பு போன்றவையும் ஏற்கனவே உதவிகளை அனுப்பியுள்ளன.

ஆதாரம் : CBCP







All the contents on this site are copyrighted ©.