2013-11-15 15:11:24

நவ.16,2013 கற்றனைத்தூறும்... தொட்ட பெட்டா சிகரம்


தொட்ட பெட்டா, தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும். ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலையை அழகாகக் கண்டு ரசிக்கலாம். இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். பின்னர் மூடப்படும். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொட்ட பெட்டா மலைக்கு கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும், பெட்டா என்றால் மலை என்றும் கன்னடத்தில் பொருள் கூறுவர். அதன் அடிப்படையிலேயே இந்த பெரிய மலைக்கு தொட்டபெட்டா என்று பெயர் வந்துள்ளது. ஆனால், இந்த மலை சங்க காலத்தில் தோட்டி மலை என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இந்த மலையின் பெயர் நளிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொட்ட பெட்டா மலையின் ஒரு பகுதி வரையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன் பிறகு சற்று குறுகலான பாதையில் நடந்து செல்ல வேண்டும். குளிர் காலங்களில் ஊட்டியைவிட இங்கு மிக அதிகமாக குளிர் நிலவுகிறது.

ஆதாரம் : தினமணி








All the contents on this site are copyrighted ©.