2013-11-14 16:11:48

திருப்பீடத் தூதரகச் செயல்கள், மேய்ப்பருக்குரிய உணர்வில் நோக்கப்பட வேண்டும், கர்தினால் பெர்த்தோனே


நவ.14,2013. திருப்பீடச் செயலரும் ஆயரே என்பதால், அவரின் தூதரகச் செயல்கள் மேய்ப்பருக்குரிய மற்றும் மறைபோதக உணர்வில் நோக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறியுள்ளார்.
தாராளமயமாக்கப்பட்ட உலகில் திருப்பீடத் தூதரகப்பணி என்ற தலைப்பில் இத்தாலிய மொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுப் பேசிய கர்தினால் பெர்த்தோனே, திருப்பீடச் செயலகம் திருப்பீடத்தின் வெளிநாடுகளுடனான உறவுகளுக்குப் பொறுப்பு என்பதாலும், திருப்பீடச் செயலர், ஒரு நாட்டின் பிரதமர் போன்று பணியாற்றுவதாலும், அவர் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி, திருப்பீடத் தூதரகம், அமைதியைக் கட்டியெழுப்புவதிலும், ஏழ்மையை ஒழிப்பதிலும் எப்போதும் கருத்தாய் இருந்து செயல்படுகின்றது எனக் கூறினார்.
கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, 2006ம் ஆண்டு முதல், இவ்வாண்டு அக்டோபர் 15ம் தேதி வரை, திருப்பீடச் செயலராகப் பணியாற்றியவர்.
திருப்பீடம் 179 நாடுகளுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.