2013-11-13 15:07:08

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சேதங்கள் வாயடைக்க வைக்கின்றன, மனிலா கர்தினால் தாக்லே


நவ.13,2013. பிலிப்பீன்சில் ஹையான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், அது ஏற்படுத்தியுள்ள அழிவுகளையும் பார்க்கும் ஒவ்வொரு நேரமும் பேச வார்த்தைகளின்றி வாயடைத்து நிற்பதாகத் தெரிவித்தார் மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே.
அதேசமயம், இப்பேரிடரையொட்டி உலகெங்கிலுமிருந்து வெளிப்படுத்தப்படும் அன்பு, அக்கறை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வால் ஆறுதல் அடைவதாக, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார் கர்தினால் தாக்லே.
மக்களின் விசுவாசத்தின் சாட்சியங்களை, குறிப்பாக உறவுகளை இழந்த மக்களின் சாட்சியங்களைக் கேட்கும்போது தான் மிகுந்த ஆறுதலடைவதாகவும், கடவுளே தங்களின் நம்பிக்கை என அம்மக்கள் கூறுவதாகவும் மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.
இதற்கிடையே, ஹையான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென வழங்கப்படும் நன்கொடைகளைப் பயன்படுத்துவதில் பிலிப்பீன்ஸ் அரசு ஒளிவுமறைவின்றி நேர்மையுடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.