2013-11-13 15:03:57

திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகைக்கு முதல் அதிகாரப்பூர்வ பயணம்


நவ.13,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகைக்கு நவம்பர் 14, இவ்வியாழனன்று முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இத்தாலிய அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான Quirinale மாளிகைக்கு இவ்வியாழன் காலையில் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களைச் சந்தித்துப் பேசுவார்.
கடந்த ஜூன் 8ம் தேதியன்று இத்தாலிய அரசுத்தலைவர் வத்திக்கானுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டதையடுத்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணம் இடம்பெறுகின்றது.
1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், அரசர் விக்டர் இம்மானுவேல் அவர்களைச் சந்தித்தற்குப் பின்னர், கடந்த 74 ஆண்டுகளில் 9 திருத்தந்தையர்கள் Quirinale மாளிகை சென்றுள்ளனர்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2008ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி Quirinale மாளிகை சென்று அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களைச் சந்தித்தார். அதற்கு முன்னர், 2005ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று Quirinale மாளிகையில் அரசுத்தலைவர் Carlo Azeglio Ciampi அவர்களையும் சந்தித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.