2013-11-13 14:54:31

அன்னைமரியா திருத்தலங்கள் – 33 பேரின் அன்னைமரியா, உருகுவாய்


நவ.13,2103. தென் அமெரிக்கக் கண்டத்தில், தென்கிழக்கில் அமைந்துள்ள உருகுவாய் நாடு, மேற்கே அர்ஜென்டீனாவையும், வடக்கிலும் கிழக்கிலும் பிரேசிலையும், தெற்கிலும், தென்கிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்நாட்டில் வாழும் 33 இலட்சம் மக்களில் 18 இலட்சம் பேர் தலைநகர் மொந்தேவிதேயில்(Montevide) வாழ்கின்றனர். புவியியல் அமைப்பின்படி இந்நாடு தென் அமெரிக்காவில் இரண்டாவது சிறிய நாடாகும். 1680ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் இந்நாட்டில் குடியேறும்வரை ஏறக்குறைய இந்நாடு மக்கள் வாழாத இடமாகவே இருந்தது. இஸ்பெயின், போர்த்துக்கல், அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையே 1811க்கும் 1828ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் உருகுவாய் நாடு விடுதலையடைந்தது. 19ம் நூற்றாண்டு முழுவதும் வெளிநாட்டவரின் ஆதிக்கம் மற்றும் தலையீட்டுக்கு இந்நாடு உள்ளாகியிருந்தது. எனினும், உருகுவாய் நாடு, இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் வளர்ந்துள்ள மற்றும் வளமையான நாடுகளில் ஒன்றாக தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
Treinta y Tres Orientales அதாவது 33 கிழக்குப் பகுதியினர் என்பது, உருகுவாய் நாட்டில் பிரேசில் பேரரசுக்கு எதிராக தளபதி Juan Antonio Lavalleja என்பவரின் தலைமையில் கிளர்ந்தெழுந்த ஓர் இராணுவ புரட்சி அமைப்பாகும். இந்த இராணுவ அமைப்பு 33 பேரைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போதைய உருகுவாய் நாடு, தற்போதைய பிரேசில் நாட்டின் Rio Grande do Sul என்ற தென் மாநிலத்தையும் உள்ளடக்கிய கிழக்கு மாநிலத்தின் விடுதலைக்காக, 1825ம் ஆண்டில் Treinta y Tres Orientales என்ற இந்த 33 பேர் கொண்ட புரட்சி அமைப்பு பிரேசில் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. அது தற்போதைய நவீன உருகுவாய் நாடு உருவாகுவதற்கு அடித்தளம் இட்டது. இந்த இராணுவப் புரட்சி அமைப்பின் 33 பேரும் உருகுவாய் நாட்டுப்பற்றாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். 1825ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியன்று இந்த 33 பேரும் தங்கள் நாட்டின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக Agraciada கடற்கரைகளில் வந்திறங்கினர். அவர்கள் Florida நகருக்குச் சென்றபோது அங்கிருந்த சிற்றாலயத்துக்குச் சென்று தங்கள் நாட்டின் எதிர்காலத்தை அங்கிருந்த அன்னைமரியாவிடம் அர்ப்பணித்தனர். உருகுவாய் நாட்டின் தேசிய விடுதலை நாள் ஆகஸ்ட் 25ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் அமைப்பின் நீதிமன்ற உறுப்பினர்கள், சுதந்திர அறிவிப்பு ஆணையில் கையெழுத்திட்டு அதனையும் தங்களையும் இந்த அன்னைமரியாவின் திருவுருவத்திடம் அர்ப்பணித்து தங்கள் நாட்டை அந்த அன்னைமரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.
இந்த நாளிலிருந்து உருகுவாய் நாட்டினர் இந்த அன்னைமரியாவை, 33 பேரின் அன்னைமரியா என அழைக்கலாயினர். மரத்தால் செய்யப்பட்ட இச்சிறிய அன்னைமரியா திருவுருவம், 18ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் பரகுவாய் நாட்டில் இயேசு சபையினரின் மறைப்பணிகளோடு தொடர்புடையது. இத்திருவுருவம், அக்காலத்தில் இயேசு சபையினரின் மறைப்பணித்தளங்களில் புகழ்பெற்றிருந்த Guarani பூர்வீக இனத்தவரின் கைவேலைப்பாடுகளில் ஒன்றாகும். இயேசு சபையினரின் கண்காணிப்பில் இருந்துவந்த Pintado என்ற சிறிய கிராமத்தில் இருந்த சிற்றாலயத்தில் 1779ம் ஆண்டுவாக்கில் இந்த அன்னைமரியா திருவுருவம் வைக்கப்பட்டது. பின்னர் இந்த முழுக் கிராமமும் தற்போதைய Florida நகரம் இருக்கும் இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அச்சமயத்தில் அக்கிராமத்தினர் தங்கள் மூதாதையர் வணங்கிய இந்த அன்னைமரியா திருவுருவத்தையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். கிழக்குப் பகுதியின் விடுதலைக்காகப் போராடிய அந்த 33 பேரும் அவ்வாலயத்துக்கு வந்து அவ்வன்னையிடம் செபித்து நாட்டின் வருங்காலத்தை அர்ப்பணித்ததாலும், இவர்கள் அக்காலத்திய கிழக்குப் பகுதியின் விடுதலைக்காகப் போராடியதாலும் இவ்வன்னைமரியா 33 பேரின் அன்னைமரியா எனவும், 33 கிழக்குப் பகுதியினரின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார்.
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று உருகுவாய் நாடு, தனது சுதந்திரத்தின் 150ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தபோது இந்த 33 பேரின் அன்னைமரியா திருவுருவமும், இந்தச் சிற்றாலயமும் "வரலாற்று நினைவுச் சின்னங்களாக" அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த 33 பேரின் அன்னைமரியா திருவுருவம் 36 செ.மீ. உயரமுடையது. அதைப் போர்த்தியுள்ள மேலாடையும், அதன் பல மடிப்புகளும், அதைச் சுற்றியுள்ள வண்ணச் சிறு கயிறுகளும் அத்திருவுருவம் அசைந்துகொண்டே இருப்பதுபோல் தெரிகின்றது. "உருகுவாய் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த" இவ்வன்னை மரியா 1857ம் ஆண்டு முதல் விலைமதிப்பற்ற கற்களைக் கொண்ட தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கிறார். அந்த 33 பேரின் இரண்டாவது தலைவரால் இக்கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவர் அந்நாட்டின் அரசுத்தலைவராக பின்னாளில் பணியேற்றார். இந்த மிகச் சிறப்பான கிரீடம், அன்னைமரியா திருவுருவத்துக்குச் சரியான அமைப்பாக இல்லாவிட்டாலும் இதுவே இத்திருவுருவத்துக்கு மகிமையாக அமைந்துள்ளது. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பரின் அனுமதியின்பேரில் 1961ம் ஆண்டில் 33 பேரின் அன்னைமரியா திருவுருவம் திருஅவையின் முறைப்படி முடிசூட்டப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் இவ்வன்னையை "உருகுவாய் நாட்டின் பாதுகாவலர்" எனவும் அறிவித்தார் திருத்தந்தை 23ம் அருளப்பர்.
33 பேரின் அன்னைமரியா திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாவது ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. உருகுவாய் நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் மக்கள் இத்திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலகின் எல்லாப் பகுதியில் வாழும் மக்களை இயேசுவின் தாயாம் அன்னை மரியா பரிவன்போடு பராமரித்து வருகிறார் என்பதற்கு ஒவ்வொரு நாட்டிலுள்ள அன்னைமரியா திருத்தலங்கள் சான்றாக நிற்கின்றன.








All the contents on this site are copyrighted ©.