2013-11-12 15:51:37

நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு அமெரிக்க ஆயர்களுக்கு வேண்டுகோள்


நவ.12,2013. தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்துக்காக உலகெங்கும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவர்களுக்காகச் செபிக்கவும், அவர்களின் சார்பாக நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் திமோத்தி டோலன்.
இப்பூமியில் அதிகளவான விசுவாசக் குழுக்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகிய அமெரிக்காவில் மேய்ப்பர்களாக இருக்கும் ஆயர்கள், உலகில் விசுவாசத்துக்காகத் துன்புறும் கிறிஸ்தவர்களின் சார்பாகச் செயல்படுகிறவர்களாக மாற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பால்ட்டிமோரில் இத்திங்களன்று தொடங்கியுள்ள நான்கு நாள்கள் கருத்தரங்கில் உரையாற்றிய பால்ட்டிமோர் பேராயர் கர்தினால் டோலன், இந்த 21ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் உலகில் 10 இலட்சம் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் புதிய சகாப்தத்தின் மறைசாட்சிகள் என்றும் அறிவித்தார்.
உலக மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள், சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என Pew ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விபரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் டோலன், நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஆயர்களின் மேய்ப்புப்பணியில் முக்கியத்துவம் பெறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்கின்றீர்களா என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதன் பொது மறைபோதகத்தில் விசுவாசிகளைக் கேட்டதையும் நினைவுபடுத்தினார் கர்தினால் டோலன்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.