2013-11-12 15:45:56

தந்தையின் கரங்களில் இருக்கும் குழந்தை போன்று கடவுளிடம் நம்மை அர்ப்பணிப்போம், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.12,2013. தந்தையின் கரங்களில் தன்னைக் கையளிக்கும் குழந்தை போன்று கடவுளிடம் நம்மை அர்ப்பணிப்போம் என, இச்செவ்வாய்க்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், அவர் நம்மை கண்டிக்கும்போதுகூட நம்மை கன்னத்தில் அறைவதில்லை, மாறாக, நம்மை அன்புடன் தடவிக்கொடுக்கிறார் என்றும் இத்திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் கரங்களால் களிமண்ணிலிருந்து நாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பது பற்றிக் கூறும், சாலமோனின் ஞானம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இக்கடவுளின் கரங்கள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும், கடவுள் நம்மை அழியாமைக்கென்று படைத்தார், ஆனால் அலகையின் பொறாமையால் உலகில் சாவு நுழைந்தது என்றும் கூறினார்.
அலகையின் பொறாமை, இறப்பில் முடியும் இந்தப் போரைத் தொடங்கியது, நாம் எல்லாரும் மரணத்தைக் கடக்க வேண்டும், ஆனால் நாம் அலகைக்குச் சொந்தமாகும்போது இதைக் கடக்கும் அனுபவம் ஒன்று, கடவுளின் கரங்களிலிருக்கும்போது இதைக் கடக்கும் அனுபவம் வேறொன்று என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தனது குழந்தையோடு இருக்கும் தந்தை போன்றவர் நம் கடவுள், அவர் நமக்கு நடப்பதற்குக் கற்றுத் தருகிறார், வாழ்வு மற்றும் மீட்பின் பாதையில் நாம் நடப்பதற்குக் கற்றுத் தருகிறார் என்றும் கூறினார்.
நமது வேதனை நேரங்களில் நம்மை அன்புடன் தடவிக்கொடுத்து ஆறுதல் அளிப்பது கடவுளின் கரங்கள், இக்கரங்கள் அன்பினால் காயமடைந்த கரங்கள் என்றும் கூறிய திருத்தந்தை, அந்தக் கரங்கள் நம்மைக் கன்னத்தில் அறையும் என்று என்னால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியவில்லை, ஒருபோதும்.. ஒருபோதும் அவர் அப்படிச் செய்யவேமாட்டார் என்றும் கூறினார்.
யாரிடம் கையளிப்பது என்று தெரியவில்லை என, பல சமயங்களில் மனிதர்கள் சொல்லக் கேள்விப்படுகிறோம், நோயாளிகளைத் தொட்டுக் குணப்படுத்திய இயேசுவின் கரங்களை நினைத்துப் பார்ப்போம், அக்கரங்கள் கடவுளின் கரங்கள், நம்மைக் குணப்படுத்தும் கரங்கள், அக்கரங்கள் நம்மைத் துன்புறுத்துவதில்லை, தந்தையின் கரங்களில் தன்னைக் கையளிக்கும் குழந்தை போன்று கடவுளிடம் நம்மை அர்ப்பணிப்போம் என, இச்செவ்வாய்த் திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.