2013-11-12 15:54:01

உலகில் நலவாழ்வுப் பணியாளர்களின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, WHO எச்சரிக்கை


நவ.12,2013. உலகில் நலவாழ்வுப் பணியாளர்களின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை இது பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்.
72 இலட்சமாக இருக்கின்ற தற்போதைய பற்றாக்குறை, 2035ம் ஆண்டில் 1 கோடியே 29 இலட்சமாக உயரும் என எச்சரித்துள்ள WHO நிறுவனம், வயது காரணமாக ஓய்வுபெறும் மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் பணிகளைத் தேடிச்செல்லும் நலப்பணியாளர்களுக்குப் பதிலாக, புதிதாகப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது இப்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளது.
மேலும், நலவாழ்வுப் பணியில் சேரும் இளையோரின் எண்ணிக்கை குறைபடுவதும், போதுமான பயிற்சியின்றி இப்பணியில் சேருவதும், வருங்காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த 47 நாடுகளில் 168 மருத்துவப் பள்ளிகள் உள்ளன, இவற்றில் 11 நாடுகளில் மருத்துவப் பள்ளிகள் இல்லை, 24 நாடுகளில் ஒரேயொரு மருத்துவப் பள்ளியே இருக்கின்றது எனவும் கவலை தெரிவித்துள்ளது WHO உலக நலவாழ்வு நிறுவனம்

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.