2013-11-11 14:11:54

வாரம் ஓர் அலசல் –அறிவியலின் பயன் உணர்வோம்


நவ.11,2013. RealAudioMP3 அறிவியல், சூரிய மண்டலம் கடந்து சுழலவும் செய்கிறது, பால்வெளி வீதிக்குள் நுழைந்து பயணத்தையும் தொடர்கின்றது. அதனால் பிற உலகம் சுருங்குகிறது. பிற கோளங்களின் இரகசியங்கள் தெரியவும் உதவுகின்றது. ஆம். சந்திரனின் இரகசியங்களை அறிந்த மனிதர், இக்காலத்தில் செவ்வாய்க்கோளின் இரகசியங்களையும் அறிந்து வருகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க்கோளுக்கு அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலம், மேலும் ஓர் அதிசய புகைப்படத்தைத் தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது. அதாவது பூமியில் காணப்படும் இராட்சத பல்லி இனம் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தற்போது திண்ம படிமமாகக் காணப்படுவதுமான உருவம் ஒன்றினைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது ஒரு பாறையின் தோற்றமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்தியாவும், தனது மங்கள்யான் செயற்கைகோள் விண்கலத்தை, இம்மாதம் 5ம் தேதியன்று செவ்வாய்க்கோளுக்கு வெற்றிகரமாக ஏவியுள்ளது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொன்விழா ஆண்டான இந்த 2013ம் ஆண்டில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்து, செவ்வாய்க்கோளைச் சென்றடையும் நான்காவது நாடு என்ற வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது. தற்போது அதிலுள்ள கருவி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறின் பாதிப்பினால் நீள்வட்டபாதையில் உயர்த்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கருவியில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளதாக இத்திங்கள் செய்தி ஒன்று கூறுகிறது. செயற்கைகோளில் ஏற்பட்டுள்ள கோளாறு உடனடியாகச் சரிசெய்யப்படும் அளவுக்கு இன்று அறிவியல் அபார முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய அதே நாளில் சீனாவிலிருந்து ஓர் அதிசய அறிவியல் செய்தி வெளியானது. சீனாவின் வடக்கேயுள்ள சீப்பெங் நகரில் மூன்று சூரியன்கள் தோன்றிய அற்புத வானியல் நிகழ்வை அங்குள்ள மக்கள் கண்டு களித்துள்ளனர். சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாகவும் சிலர் கூறியுள்ளனர். வானில் 6,000 மீட்டர் உயரத்துக்குமேல் பனிக்கட்டிகள் உருவாகும்போது அதில் ஊருடுவும் ஒளிச் சிதறல்கள், வானவில் உருவாவதுபோல் சூரியன்களை உருவாக்குகிறது என்று சீப்பெங் வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங்சிங் கூறினார். மேலும், கடந்த அக்டோபர் 24ம் தேதியன்று, 30 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள விண்மீன் தொகுதி(Galaxy) ஒன்றை, பன்னாட்டு வானியலாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் இது மிக அதிக தூரத்தில் உள்ள விண்மீன் தொகுதி என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இன்னும், விண்மீனின் சுழல் திசைக்கு எதிர்த் திசையில் அதன் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பத்தை, கடந்த அக்டோபரில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் அனைத்துக் கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப் பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறு இல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் இதழ்கள் கூறுகின்றன.
அன்பு நேயர்களே, நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மருத்துவம், இயற்பியல், வேதியல், தொல்லியல், உயிரியல், நிலவியல், வேளாண்மையியல், தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அறிவியல்மேதைகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. பல சோதனைகளைக் கடந்து அவர்கள் படைத்துள்ள சாதனைகளால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர்கள்கூட வாழாத சொகுசு வாழ்க்கையை இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியும், பிளாஸ்டிக் தார் சாலை வசதிகளைத் தந்தும், எண்ணெய் விளக்குகூட எரிய வழியில்லாதிருந்த கிராமங்களில் மின்விளக்கை எரியச் செய்தும் மக்கள் வாழ்வை வளப்படுத்தியுள்ளது அறிவியல். காலையில் கண் விழித்தவுடனேயே தேவைப்படும் தண்ணீர் முதல், உறக்கத்தின்போது தேவைப்படும் சுழல்காற்றாடி, குளிர்சாதன வசதி, இன்னும் கொசு, மூட்டைப்பூச்சி நீக்கிவரை அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாமல் எந்த நாளும் முடிவதில்லை. எந்தத் தொழிலானாலும் அதைச் சார்ந்த தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் தேவைக்கு அறிவியல் துணை நிற்கிறது. தகவல் அறிய, கைபேசி, தொலைபேசி, கணனி, மடிக்கணனி, மின்னஞ்சல், வலைப்பூ, தினசரிகள், வார, மாத இதழ்கள் என அனைத்தையும் நாம் பெற்றுப் பலன்பெற அறிவியல் துணைநிற்கிறது. போக்கு வரத்துக்கு, ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழித்து மன நிறைவு பெற, சுற்றுச் சூழலின் தட்ப வெப்பத்தை சமநிலைப்படுத்த அறிவியல் பெரிதும் தேவைப்படுகிறது. இவ்வாறு இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் நமது அன்றாடத் தேவைகள், அறிவியலின் கொடைகளாலேயே ஈடுகட்டப்படுகின்றன.
எனவே அன்றாட வாழ்வில் அறிவியலின் பயனை பொது மக்களுக்கு உணர்த்தும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ 2001ம் ஆண்டில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினத்தை உருவாக்கியது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10ம் தேதி உலக அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அமைதி மற்றும் சமூக வளர்ச்சிக்காக அறிவியலைப் பயன்படுத்துதல், அதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள், எதிர்ப்புக்களைச் சமாளித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு, அனைத்துலக தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாகச் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, “தண்ணீர் ஒத்துழைப்புக்கு அறிவியல்:அது குறித்த விபரங்களையும் செய்திகளையும் பகிர்நது கொள்ளல்” என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று இவ்வாண்டுக்கான உலக அறிவியல் தினம் சிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில் 1987ம் ஆண்டு முதல், தேசிய அறிவியல் தினம், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்து மண்ணில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகில் உள்ள மாங்குடி என்ற ஊரில் பிறந்து, உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நொபெல் அறிவியல் விருது பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதிதான் தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவரின் கண்டுபிடிப்பான “இராமன் நிறத்தோற்றம்” அறிவியல் துறையின் அடிப்படையாக விளங்குகிறது.
உலக அறிவியல் தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova,
RealAudioMP3 மாறிவரும் இன்றைய உலகுக்கு அறிவியலும், அறிவியலாளர்களும் அதிகம் தேவை. அறிவியல் மக்களை ஒன்றிணைக்கும் சக்தி. வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளையும், அனைத்துச் சமூகங்களுக்கும் இன்று தேவைப்படும் உந்து சக்தியையும் அளிப்பது அறிவியல். தண்ணீர், மனித வாழ்வுக்கும் மனித வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான மிக விலைமதிப்பற்ற வளம். எனவே இதனைப் பயனுள்ள முறையில் பகிர்ந்து நிர்வகிக்க வேண்டிய சவாலை நாம் கொண்டுள்ளோம். ஒத்துழைப்பு புதிய சிந்தனைகளையும் தீர்வுக்கான புதிய வழிகளையும் கொணர்கிறது. தண்ணீர் ஒத்துழைப்பு, அறிவியல் அல்லது தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல, இது மனித உரிமைகளுக்கும் ஆதரவளிக்கின்றது. நாடுகளுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அமைதிக்கும் அடித்தளமிடுகின்றது. எனவே அறிவியலுக்கும் கொள்கைக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவோம். தண்ணீர் வளங்கள் பாதுகாக்கப்பட நமது ஒத்துழைப்பு தேவை
என்று கூறியுள்ளார RealAudioMP3 ். அன்பு நேயர்களே, தண்ணீரின் முக்கியத்துவம் தமிழர்களாகிய நமக்குத் தெரியாததன்று. பிலிப்பீன்சில் அடித்த கடும் ஹையான் சூறாவளி மற்றும் சுனாமியாக எழுந்த கடல் அலைகளுக்குள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டிலிருந்து சகாரா பாலைவனம் வழியாக அல்ஜீரியாவுக்குப் பேருந்தில் பயணம் செய்த மக்கள் வழியில் அந்தப் பேருந்து பழுதடையவே, தண்ணீர்த் தாகத்தால் 87க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கூடங்குளம் அணுக்கழிவை எங்கு கொட்டுவது என்பது முடிவு செய்யப்படாமலே இருக்கின்றது. தொழிற்சாலைக் கழிவுகளால் ஆறு, குளம், கிணறு என நீர்வளங்கள் மாசுபடுத்தப்பட்டுள்ளன. இவை மனிதரின் அன்றாட வாழ்வுக்கும், நலவாழ்வுக்கும் கடும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன. புதுப்புது நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கத்திற்கு வழிவகுக்கும் அறிவியல், அழிவிற்கும் துணைபோகின்றது என்பதை நாம் மறுக்க இயலாது.
மானுடம் தழைக்க வயல்வெளிகள், செடி கொடிகள் பூத்து புன்னகை செய்கின்றன. ஆனால் அறிவியலின் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தானியங்களும் காய்களும் நஞ்சுகளாகின்றன. உலகோர் தேவைகளை தொழிற்சாலைகளாகப் பூர்த்தி செய்யும் அறிவியல், ஓசோன் படலத்தையும் ஓட்டையாக்கிவிட்டது. கணனிகளாக, ரோபோக்களாக விந்தை காட்டும் அறிவியல், கண்களுக்கு எரிச்சலையும், சோம்போறித்தனத்தையும் உருவாக்குகிறது. அரியும் வெங்காயம் மருந்தாகவும், அதேநேரம் எரிச்சல் தருவதாகவும் இருப்பது போன்றுள்ளது அறிவியல். ஆயினும் அறிவியலின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அது சாதித்துவரும் அற்புதங்களை மறுக்கவும் முடியாது. மனிதர் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனைகளையெல்லாம் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் அகற்ற முடியும். உலக அறிவியல் தினத்தை நினைவுகூரும் நாம் அறிவியல்மேதைகளைப் போற்றுவோம்.
தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை ராமானுஜம், உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சி மேற்கொண்ட எஸ்.என்.போஸ், தாவரவியல் அறிஞர் சகானி, இயற்பியலார் மேகநாத் சஹா, ஆரியப்பட்டாவை விண்ணில் பறக்க வைத்த விக்ரம் சாராபாய், புவியியலார் எம்.எஸ்.கிருஷ்ணன், ஹோமிபாபா, அணுஅறிவியலாளர் அப்துல் கலாம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற மாமேதைகள், உலக அறிவியல் அரங்கில் இந்தியாவை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள். இந்தப் பட்டியல் நீள்வதற்கு, நம் குடும்பங்களிலும், சமூகங்களிலும் இளம் அறிவியலாளர்களை உருவாக்குவோம், வளர்ந்துவரும் அவர்களை ஊக்குவிப்போம். எந்த ஒரு நாகரிகத்துக்கும் அடிப்படை அறிவியலே என உணர்ந்து நம்மில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.