2013-11-11 14:02:36

கற்றனைத்தூறும்...உலக நிமோனியா நாள், நவம்பர் 12


நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு. ஆயினும் நிமோனியா என்பதே பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய நுண்ணுயிர்கள் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி(Pneumocystis Carinii) ஆபத்தானது. உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை இது தாக்கவல்லது. நமது நுரையீரல்கள் வலதுபக்கத்தில் மூன்று பகுதிகளாகவும், இடது பக்கம் இரண்டு பகுதிகளாகவும்(lobes) அமைந்துள்ளன. நிமோனியா இவற்றில் ஒரு பகுதியை மட்டும் அல்லது ஒரு நுரையீரலின் எல்லாப் பகுதியையும், அல்லது இரண்டு பக்கத்திலும்கூட தாக்கலாம். இவ்வாறு நுரையீரலின் காற்றுப் பைகள் பாதிக்கப்பட்டால், அவை செயல் இழந்துபோய் மூச்சுத் திணறல் உண்டாகிறது. நிமோனியா யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால் குழந்தைகள், சளி, காய்ச்சல் உண்டானவர்கள், முன்பே நுரையீரலில் குறைபாடு உள்ளவர்கள், உடல் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள், மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், அதிகம் புகைப்பவர்கள், அதிகம் குடிப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை இது எளிதில் தாக்கலாம். சுவாசிக்கும்போது கிருமிகள் நுரையீரலுக்குள் நேரடியாகப் புகுவதின் மூலமும், வாய், தொண்டை, மூக்கிலிருந்து கிருமிகள் நுழைவதின் மூலமும் நிமோனியா உண்டாகலாம். அதிக வெப்பமுள்ள காய்ச்சல், குளிர், நடுக்கம், மூச்சுத்திணறல், விரைவாகச் சுவாசித்தல், கடுமையான இருமல், சளியில் நிறமாற்றம், சுளீர் எனும் நெஞ்சு வலி, குழந்தைகள் சுறுசுறுப்பு குன்றிய நிலையில் உணவு உண்ணாமல் சுணங்கி காணப்படுவர், குழந்தைகள் மூச்சுவிடும்போது மெல்லியதாகவோ அல்லது இரைச்சலுடனோ ஒருவித ஓசை(grunting) எழுதல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும். நிமோனியாவுக்கு மருத்துவமனையில் தங்கிதான் சிகிச்சை தர வேண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. நிமோனியாவில் வேறொரு வகையும் உள்ளது. இதை, புரையேறி நிமோனியா(aspiration pneumonia) என்பர். உணவு, நீர், வாந்தி அல்லது இதரப் பொருட்கள் தவறாக சுவாசக்குழாயினுள் புகுந்து நுரையீரலில் வீக்கத்தையும், அடைப்பையும், கிருமித் தொற்றையும் உண்டுபண்ணுவதால் இந்த வகையான நிமோனியா உண்டாகிறது. ஆண்டுதோறும் நவம்பர் 12ம் தேதியன்று நிமோனியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாகும். நிமோனியா காய்ச்சலால், 2012ம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 11 இலட்சம் சிறார் உலகில் இறந்துள்ளனர்.

ஆதாரம் : thinnai.com







All the contents on this site are copyrighted ©.