2013-11-11 15:28:08

உண்மையிலேயே மனம் மாறாமல் கிறிஸ்தவராக நடிப்பவர் திருஅவையை சேதப்படுத்துகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.11,2013. ஒருகையால் திருடிக்கொண்டு, மறுகையால் கோவிலுக்கு காணிக்கைச் செலுத்தி தன்னை நல்லவராகக் காண்பித்து, இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருப்பவர்கள் அநீதியான வாழ்வை மேற்கொள்பவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டையும் ஏழைகளையும் சுரண்டி திருடிக்கொண்டே நல்லவர்களாக இரட்டை வேடம்போடுபவர்கள், கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளப்படவேண்டியவர்கள் என இயேசு கூறுகிறார் என்றார்.
ஊழல் புரிபவர்களாக கிறிஸ்தவர்களும், குருக்களும் மாறும்போது திருஅவையும் ஊழல் நிறைந்ததாக மாறுகின்றது என்ற திருத்தந்தை, நாமெல்லாம், உள்ளே எலும்புகளையும் அழுகிய நிலைகளையும் கொண்டு, வெளியே அழகாய்த் தோற்றமளிக்கும் வெள்ளயடிக்கப்பட்ட கல்லறைகளாக மாறுகிறோம் எனவும் கூறினார்.
இரட்டை வாழ்வைக்கொண்டிருக்கும் சூழலிலும் நாம் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டாலும், நம் வாழ்வு கிறிஸ்தவ வாழ்வாக இருக்காது எனவும் கூறினார் திருத்தந்தை.
நாம் ஒவ்வொருவரும் பாவிகள் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் அருளைத் தருமாறு தூய ஆவியிடம் வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.