2013-11-09 15:23:33

திருஅவை எப்பொழுதும் அருளின் நீரைப் பொழிந்து கொண்டிருக்குமாறு செபிப்போம், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.08,2013. திருஅவை எப்பொழுதும் கிறிஸ்துவின்மீது கட்டப்பட்டதாய், அது எப்பொழுதும் அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்து அருளின் நீரை எப்பொழுதும் பொழிந்து கொண்டிருக்குமாறும், திருஅவையின் உறுப்பினர்கள் இயேசுவிடம் மனமாறிச் செல்வதற்குத் தங்களை எப்பொழுதும் கையளிக்க வேண்டுமென்றும் செபிப்போம் என இச்சனிக்கிழமை காலையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவாகிய இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இவ்விழா குறித்து சிறிய மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு விசுவாசிகள் அனைவரையும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உரோம் பேராலயமாகவும், உரோம் நகர் மற்றும் உலகின் அனைத்து ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாகவும் விளங்கும் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவாகிய இந்நாளைய விழா, உரோம் நகரின் விழா, உரோம் திருஅவையின் விழா, அகிலத் திருஅவையின் விழா என்று இச்சிறிய மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை.
இத்திருப்பலியின் மூன்று வாசகங்களில் திருஅவை பற்றிக் கூறும் மூன்று அடையாளங்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ள பாறை என்பது இயேசு கிறிஸ்துவே, இவரின் மீதே திருஅவை கட்டப்பட்டுள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் தலைகள் வெள்ளிப் பேழைகளில் புனிதமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், புடென்ஸ் என்பவரின் வீட்டில் புனித பேதுரு திருப்பலி நிகழ்த்தப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் மரத்தாலான பீடமும், இறுதி இரவு உணவின்போது ஆண்டவர் இயேசு பயன்படுத்திய மேஜையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.