2013-11-08 15:27:39

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையில் நீதிக்குப் பணிசெய்பவர்கள் காணாமல்போன ஆட்டின்மீது அக்கறை காட்டும் நல்ல ஆயர்களாக இருக்க வேண்டும்


நவ.08,2013. கத்தோலிக்கத் திருஅவையில் நீதிக்குப் பணிசெய்பவர்கள் அதிகார மனப்பான்மை கொண்டவர்களாகச் செயல்படாமல், காணாமல்போன ஆட்டின்மீது அக்கறையாய் இருக்கும் நல்ல ஆயர்களாகப் பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் Supreme Tribunal of the Apostolic Signatura என்ற அருள், நீதி அமைச்சகம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 55 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருமணத்தைச் செல்லாததாக ஆக்குவது, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கும் வழக்குகளில் திருமணப்பிணைப்புக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞரின் பங்கு போன்ற தலைப்புகளில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
திருஅவையில் நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல ஆயராம் இயேசுவின் திருவுருவம் எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமெனக் கூறிய திருத்தந்தை, இப்பணியாளர்கள் தலையாட்டும் பொம்மைகளாக, குறிப்பாக, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கும் நடைமுறைகளில் வெறும் சட்டங்களை மட்டும் பின்செல்பவர்களாக இருத்தல் கூடாது எனக் கூறினார்.
திருமணப்பிணைப்புக்கு ஆதரவாக வாதிடுவோரின் பணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய திருத்தந்தை, இப்பணி செய்வோர் நற்பணி செய்ய வேண்டுமெனில் சட்டங்களை மட்டும் வேகமாக வாசித்தோ அல்லது அதிகரா மனப்பான்மையோடோ செயல்படக் கூடாது, மாறாக, திருஅவை மற்றும் சமூகத்தின் தெளிவான சூழலில் திருஅவைச் சட்டங்களோடு ஒத்திணங்கிச் செல்லும் விதத்தில் தீர்ப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதிக்குச் சேவை செய்வது அப்போஸ்தலிக்க வாழ்வின் அர்ப்பணம் எனவும், இப்பணி செய்பவர்கள், காணாமல்போன மற்றும் காயமடைந்த ஆட்டின்மீது அக்கறைகாட்டும் நல்ல ஆயரின் திருவுருவத்தின்மீது தங்கள் கண்களைப் பதித்து பணி செய்யுமாறும் கூறிய திருத்தந்தை, நீதியின் கண்ணாடியாகிய மரியின் பாதுகாவலில் வைத்து அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையில் மிக உயரிய நீதி அதிகாரத்தைக் கொண்டுள்ள, இந்த அருள் மற்றும் நீதி அமைச்சகம், திருஅவையில் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.