2013-11-08 15:25:56

கோஸ்தா ரிக்கா நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு


நவ.08,2013. மத்திய அமெரிக்க நாடான கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் Laura Chinchilla Miranda அவர்கள் இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து தனது நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பர்த்தி அவர்களையும் சந்தித்தார் கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் Laura Chinchilla.
கோஸ்தா ரிக்கா நாடு எதிர்கொள்ளும் சில சமூக மற்றும் பிற பொதுவான விவகாரங்களில், குறிப்பாக, மனித வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில், அரசுக்கும், திருஅவைக்கும் இடையேயான ஒத்துழைப்பு இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் கூறியது.
கோஸ்தா ரிக்கா நாட்டின் பொது நலன் மற்றும் வளர்ச்சியையொட்டி திருப்பீடத்துக்கும் அந்நாட்டுக்கும் இடையே உறவுகளை உறுதிப்படுத்த வருங்காலத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வருவது குறித்தும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.