2013-11-08 15:31:55

கொலம்பியாவில் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதற்குத் தலத்திருஅவைக்கு அரசு நன்றி


நவ.08,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் FARC புரட்சிக்குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதற்குத் தலத்திருஅவைக்கு நன்றி தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC பெரிய புரட்சிக் குழுவுக்கும் இடையே கியூபாவில் இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தையில், புரட்சிக் குழுவின் வருங்கால அரசியல் மற்றும் புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவகாரத்துக்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பிய அரசுக்கும், FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதன் மூலம் அந்நாட்டில் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த உள்நாட்டுச் சண்டை முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கியூபாவில் இடம்பெற்றுவரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கென எட்டு அடிப்படை கூறுகளைச் சுட்டிக்காட்டும் 92 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் ரூபன் சலசார் கோமெஸ்.
கொலம்பியாவின் உள்நாட்டுச் சண்டையில், ஏறக்குறைய 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
1984ம் ஆண்டிலிருந்து கொலம்பிய கத்தோலிக்கத் திருஅவையின் 83 அருள்பணியாளர்கள், 5 அருள்சகோதரிகள், 3 துறவற அருள்பணியாளர்கள், இன்னும் பெருமெண்ணிக்கையிலான வேதியர்கள் இச்சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CWN







All the contents on this site are copyrighted ©.