2013-11-07 16:12:25

மன்னாரில் காணாமல் போனோர் குறித்து புகார்


நவ.,07,2013. இலங்கையில் போர்க் காலத்தில் காணாமல்போனவர்களின் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட அரசுத்தலைவர் ஆணைக்குழுவிடம் மன்னார் மாவட்டத்தில் காணாமல்போன ஏறக்குறைய 2301பேர் குறித்த புகார்கள் அருள்பணி செபமாலை அவர்களின் தலைமையில் வந்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிருலப்பனையில் உள்ள தலைமையகத்தில் வைத்து ஆணையர்களைச் சந்தித்த மன்னார் குடிமக்கள் குழுவின் தலைவரான அருள்பணி செபமாலை அவர்களின் தலைமையிலான குழுவினர், ஏற்கனவே இவை குறித்து தாம் பல இடங்களில் புகார் செய்தும் எந்த விதமான பலனும் கிடைக்காத காரணத்தால் இந்த ஆணைக்குழுவிலும் தாங்கள் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இருப்பதாகக் கூறியுள்ளனர்.
வேறுவழி இல்லாத காரணத்தால் இந்தப் புகார்களை தாம் இப்போது செய்ய வந்துள்ளதாகவும், அத்துடன் இன்னமும் பலர் நம்பிக்கை இழந்த நிலையில் புகார்கூடச் செய்ய முன்வாராத நிலையில் இருப்பதாகவும் அருள்பணி செபமாலை கூறினார்.
இவர்களுக்கு பதிலளித்துப் பேசிய ஆணையர்களில் ஒருவரான மனோ இராமநாதன் அவர்கள், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க, தன்னாலான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார். அத்துடன், புகார்கள் செய்வது குறித்து மிரட்டல் எதுவும் வந்தால், அதனையும் தன்னிடம் கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு 6 மாதங்களுக்குள் புகார்களைப் பெற்று, விசாரணைகளை நடத்தி, அரசுத்தலைவருக்கு அறிக்கை வழங்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.