2013-11-07 16:15:11

நாடோடி இனத்தவர் மற்றும் ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுமாறு ப்ரெஞ்ச் பேராயர் வலியுறுத்தல்


நவ.07,2013. நாடோடி இனத்தவர் மற்றும் குடியேற்றதாரர் குறித்த ப்ரெஞ்ச் அரசின் அணுகுமுறைகளைக் குறைகூறியுள்ள அதேவேளை, ஏழைகளுடனான ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் அவர்களுக்கான நீதியில் கத்தோலிக்கத் திருஅவை எடுத்துக்காட்டாகச் செயல்பட வேண்டுமென அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர் பேராயர் Georges Pontier அழைப்பு விடுத்துள்ளார்.
பல காலமாக பிரான்ஸ் நாட்டுக்குள் வாழும் பல்கேரிய மற்றும் ருமேனிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சரியான கொள்கைகளை பிரான்ஸ் அரசு இன்னும் வடிவமைக்கவில்லை என குறைகூறிய பேராயர் Pontier, நலவாழவுக் காரணங்களைக் காட்டி சில குடியிருப்புக்களை இடிப்பது நியாயமே எனினும், அங்குக் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடங்களை வழங்காமல் தெருவில் விடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கவலையை வெளியிட்டார்.
சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் விட்டு விலகி ஓடும் ஒரு சமுதாயத்தால் ஒரு நாளும் முன்னேற முடியாது என உரைத்த பிரான்ஸ் நாட்டுஆயர்பேரவைத் தலைவர் பேராயர் Pontier, சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களுக்குத் தலத்திருஅவை தனது நடவடிக்கைகள் மூலம் வழிகாட்ட முயல்கிறது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.