2013-11-06 15:19:33

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவித்ததால் மெக்சிகோ ஆயர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல்


நவ.06,2013. மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துவரும்வேளை, போதைப்பொருள் வியாபாரத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மறைமாவட்டங்களில் மறைப்பணியாற்றுவது கடினமாக மாறி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
தென் மெக்சிகோவின் Michoacan மாநிலத்தில் Apatzingan மறைமாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகளால் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அச்சம் மற்றும் வன்முறைகளைக் கண்டித்து அண்மையில் கடிதம் எழுதிய அம்மறைமாவட்ட ஆயர் Miguel Patiño Velasquez அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் மேலும் கூறுகின்றன
திட்டமிட்டக் குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் ஆள்கடத்தல்கள், பிணையல்கைதிகள், கொலைகள், இலஞ்சம் வாங்குதல் போன்றவை தனது மறைமாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் ஆயர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Michoacan மாநில அரசின் ஊழலையும் கண்டித்துள்ள ஆயர் Patiño Velasquez, அம்மாநிலம் திறமையற்ற மாநிலம் எனவும் குறைகூறியுள்ளார்.
இதற்கிடையே, எங்களுக்கு அமைதி வேண்டும் என்ற சுலோகத்துடன் கடந்த ஞாயிறன்று பேரணி ஒன்றையும் முன்னின்று நடத்தியுள்ளார் ஆயர் Patiño Velasquez.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.