2013-11-06 14:55:54

நவ.07,2013. கற்றனைத்தூறும்.....'மங்கள்யான்' பயணம்


பூமியில் இருந்து 4 இலட்சம் கி.மீ. தூரத்தில் சந்திரன் உள்ளது. ஆனால் இதைவிட, ஆயிரம் மடங்கு அதிகத் தூரத்தில் செவ்வாய்க் கிரகம் உள்ளது. பூமியும், செவ்வாய்க் கிரகமும், தனித் தனியான நீள்வட்டப் பாதையில், சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியக் குடும்பத்தின் சுற்றுப்பாதையில், இந்தக் கிரகங்கள் சுற்றி வரும் வேகம், ஒரே சீராக உள்ளது. பூமியும், செவ்வாயும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான், அருகில் நெருங்கி வரும். இதைக் கணக்கில் கொண்டே, 'மங்கள்யான்' செயற்கைகோள், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூமியும், செவ்வாய்க் கிரகமும் அருகில் இருக்கும்போதுதான், குறைவான எரிபொருள் செலவில், செயற்கைகோளை அனுப்ப முடியும் மற்றும் செயற்கைகோளுக்கும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், தகவல் தொடர்பு சீராக இருக்கும். தூரம் அதிகரிக்கும்போது, தகவல் தொடர்பு சரியாக இருக்காது. எனவே, பூமியும், செவ்வாய்க் கிரகமும் அருகில் இருக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு,'மங்கள்யான்' செயற்கைகோள் தற்போது ஏவப்பட்டுள்ளது.
பூமியின் சுற்று வட்ட பாதையைவிட்டு வெளியேறும் வரைதான், செயற்கைகோளுக்கு எரிபொருள் தேவைப்படும். அதன்பின், ஆற்று நீரில் செல்லும்படகு போல, செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி சென்றுகொண்டு இருக்கும்.
பூமிக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கடக்க, 10 மாதங்களாகும். எனவே, 'மங்கள்யான்' செயற்கைகோள் செவ்வாய்க் கிரகத்தை அடையும் காலத்தை, அது ஏவப்பட்ட நாளிலிருந்து, 10 மாதங்களாக கணக்கிட்டு உள்ளனர் என அறிவியல்புரம்' இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறியுள்ளார். மங்கள்யான் 450 கோடி ரூபாய்த் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து கிளம்பிய செயற்கைகோள், பூமியின் சுற்று வட்டப்பாதையை அடைந்ததும் உள்வட்டப்பாதையில், 250 கி.மீ. முதல் 23,500 கி.மீ. தூரத்தில், நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும். பின், அடுத்த மாதம், 1ம் தேதி, பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி, செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை நோக்கி, செயற்கைகோள் தன் பயணத்தை துவங்கும். தொடர்ந்து, விண்வெளியில் வலம் வரும் செயற்கைகோள், அடுத்த ஆண்டு செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடையும்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.