2013-11-05 15:21:12

மனித வியாபாரம் குறித்த வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கு


நவ.05,2013. மனித வியாபாரம் என்ற வடிவில் இடம்பெறும் நவீன அடிமைத்தனம் குறித்து இம்மாதம் 2,3 தேதிகளில் வத்திக்கானில் அனைத்துலக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளனர் வல்லுனர்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் திருப்பீட அறிவியல் கழகமும், உலக கத்தோலிக்க மருத்துவக் கழக கூட்டமைப்பும் இணைந்து இந்த அனைத்துலக கருத்தரங்கை நடத்தியுள்ளன.
உலகெங்கிலுமிருந்து 60 வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த அனைத்துலக கருத்தரங்கு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருப்பீட அறிவியல் கழகத் தலைவர் ஆயர் Marcelo Sanchez Sorondo, இக்கருத்தரங்கில் பேசப்படும் கருத்துக்கள் இவ்விவகாரம் குறித்து தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைக்கு இன்றியமையாதவை என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனோஸ் ஐரெஸ் பேராயராகப் பணியாற்றியபோது, மனித வியாபாரத்துக்கெதிராய் பணிசெய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் எனவும் ஆயர் Sanchez Sorondo கூறினார்.
மனித வியாபாரம், இக்காலத்தில் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2012ம் ஆண்டின் ஐ.நா. தொழில் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2002ம் ஆண்டுக்கும், 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 2 கோடியே 90 இலட்சம் பேர் கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் எனத் தெரிகிறது. எனினும் சரியான எண்ணிக்கை தெரியவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.