2013-11-05 15:22:55

மனித வியாபாரத்துக்கெதிரான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் உருவாக்கப்பட திருத்தந்தையிடம் பரிந்துரை


நவ.05,2013. மனித வியாபாரத்துக்கெதிரான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் உருவாக்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பரிந்துரை செய்துள்ளனர் அருள்சகோதரிகள்.
மனித வியாபாரம் குறித்து வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்சகோதரிகள் இந்தத் தங்களது ஆவலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பரிந்துரைத்தபோது அதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும், அதற்குரிய ஒரு நாளைக் கூறும்படியாக அவர் கேட்டதாகவும் தெரிவித்தார் அருள்சகோதரி யூஜெனியா பொனெத்தி.
அடிமையாகிய புனித ஜோஸ்பின் பக்கித்தா விழாவான பிப்ரவரி 8ம் தேதியை தாங்கள் திருத்தந்தையிடம் பரிந்துரைத்ததாகக் கூறிய அருள்சகோதரி பொனெத்தி, மனித வியாபாரம் குறித்த உலகளாவிய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அனைத்துலக செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளைப் பரிந்துரை செய்ததாகக் கூறினார்.
மனித வியாபாரம் குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சில மறைமாவட்டங்களும் சில பங்குகளுமே தற்போது ஆர்வத்தோடு இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டார் அருள்சகோதரி பொனெத்தி.
19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்த சூடான் நாட்டு அடிமைப்பெண்ணாகிய பக்கித்தா இத்தாலியில் சுதந்திரமான வாழ்வை மேற்கொண்டு, திருமுழுக்குப் பெற்று துறவு சபையில் சேர்ந்து புனித வாழ்வு நடத்தியவர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.