2013-11-05 14:46:43

நவம்பர் 06, கற்றனைத் தூறும் – "1943: வத்திக்கான் மீது குண்டுகள்"


சரியாக 70 ஆண்டுகளுக்கு முன், 1943ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இரவு 8.15 மணிக்கு வத்திக்கான் நகருக்கு மேல் பரந்த ஒரு விமானத்திலிருந்து 5 குண்டுகள் வத்திக்கான் மீது வீசப்பட்டது. வத்திக்கான் ஒரு நடுநிலை நாடு என்பதை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தாலும், அன்று வத்திக்கான் மீது குண்டுகள் வீசப்பட்டது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஐந்து குண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்து, ஒரு குடிநீர் தொட்டி சிதறியது. மற்ற நான்கு குண்டுகள் வெடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து எவ்வித விவாதங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அன்றையத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். இவ்விவாதங்கள் இன்னும் அதிக பகைமையை வளர்க்கும் என்ற காரணத்தால் திருத்தந்தை இக்கட்டளையை விடுத்தார்.
Augusto Ferrara என்ற நிருபர், Verona என்ற நகரில் பழம்பொருள்களை விற்கும் ஒரு கடையில், தான் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு சில புகைப்படங்களின் உதவியைக் கொண்டு, இத்தாக்குதல்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது ஆய்வின் முடிவாக, 2010ம் ஆண்டு, "1943: Bombe Sul Vaticano", அதாவது, "1943: வத்திக்கான் மீது குண்டுகள்" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.
இந்நூலில் காணப்படும் ஒரு முக்கியத் தகவல், வத்திக்கான் வானொலியுடன் தொடர்புடையது. 1943ம் ஆண்டு, நவம்பர் 5ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதல் வத்திக்கான் வானொலி நிலையத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல் என்பதே அத்தகவல்.
1933ம் ஆண்டு தன் பணிகளைத் துவக்கிய வத்திக்கான் வானொலி, இரண்டாம் உலகப் போரின்போது துணிவுடன் பணியாற்றியது, ஜெர்மன் நாட்டுடன் இணைந்து போரிட்டப் படைகளுக்கு சங்கடங்களை உருவாக்கியதால், இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. வத்திக்கான் வரலாற்றில் இதுவே முதலும் கடைசியுமான தாக்குதல். இது நிகழ்ந்து இன்று 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஆதாரம் - romereports.com








All the contents on this site are copyrighted ©.