2013-11-05 14:55:17

நவ.,05,2013. காணாமற்போனவை பற்றிய உவமை : பகுதி-1. வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுக்கு!


RealAudioMP3 இனியவர்களே, நான் அடிக்கடி ரசித்துப் பார்க்கும் ஒரு குறும்படம் 'வாட் இஸ் தட்?' கான்ஸ்டான்டின் பிளாவியுஸ் இயக்கி 2007ஆம் ஆண்டு வெளியான கிரேக்க மொழித்திரைப்படம் இது. வெறும் ஐந்து மணித்துளிகள் ஓடக்கூடிய இக்குறும்படத்தின் நடிகர்கள் மூன்றே பேர்தான். ஒரு வயதான தந்தை. அவரது இளவயது மகன். பறந்து திரியும் ஒரு சிட்டுக்குருவி.
தந்தையும் மகனும் தங்கள் வீட்டையொட்டியிருக்கின்ற தோட்டத்திலுள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர். தந்தை அமைதியாக அமர்ந்திருக்கின்றார். மகன் அமைதியாக நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறான். இவர்களின் அமைதியைக் குலைப்பதற்காக(!) பறந்து வருகிறது ஒரு சிட்டுக்குருவி. தந்தை மகனைப் பார்த்துக் கேட்கின்றார், 'வாட் இஸ் தட்?' (அது என்ன?) மகனும் நியூஸ்பேப்பரை விலக்கிப் பார்த்துவிட்டு 'சிட்டுக்குருவி' என்கிறான். தந்தையும் அதை மௌனமாக ஆமோதிக்கின்றார். ஐந்து செகண்டுகள் கழித்து மறுபடியும், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'நான்தான் சொன்னேன்ல அப்பா! அது ஒரு சிட்டுக்குருவி!,' தான் தொந்தரவு செய்யப்பட்ட எரிச்சலில் விடைதருகின்றான் மகன். அங்குமிங்கும் பறக்கும் சிட்டுக்குருவி சற்றுத் தள்ளிச் சென்று அமர்கிறது. அதை உற்றுப்பார்க்கின்ற தந்தை மறுபடியும் தன் மகனிடம், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'எத்தனை தடவை சொல்வது...சிட்டுக்குருவி...பாருங்க சிட்டுக்குருவி...சி...ட்...டு...க்...கு...ரு...வி...' என்கிறான் கோபமாக. 'அது என்ன?' மீண்டும் கேட்கின்றார் தந்தை. மகன் கோபத்தில் வெடிக்கிறான், 'எத்தனை தடவை சொல்றது ... அது ஒரு சிட்டுக்குருவி ... ஏன் இப்படிப் பண்றீங்க?!' தந்தை பெஞ்சிலிருந்து எழுகின்றார். 'எங்கே போறீங்க?' கேட்கின்றான் மகன். மௌனமாகத் தன் வீட்டிற்குள் செல்கின்ற தந்தை, ஒரு பழைய டைரியுடன் வெளியே வந்து மீண்டும் பெஞ்சில் அமர்கின்றார். டைரியின் ஒரு பக்கத்தை மகனிடம் நீட்டி, 'படி, சத்தமாகப் படி!' என்கிறார். மகன் டைரியின் பக்கத்தைச் சத்தமாக வாசிக்கின்றான், 'இன்று நானும் மூன்று வயது நிரம்பிய என் மகனும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது. 'அது என்ன?' என்று மகன் 21 முறை என்னிடம் கேட்டான். நானும் 21 முறையும் 'அது ஒரு சிட்டுக்குருவி' எனப் பதில் சொன்னேன். ஒவ்வொரு முறை அவன் அதே கேள்வியைக் கேட்டபோதும் அவனை மீண்டும் மீண்டும் கட்டித் தழுவிக்கொண்டேன் - எரிச்சல்படாமல் அவனது குழந்தையுள்ளத்தை எண்ணி அவனை அன்போடு தழுவிக்கொண்டேன்.' சிறிது நேர மௌனம். டைரியை மூடிவிட்டு மகன் தன் தந்தையை அணைத்து முத்தமிடுகிறான். 'வாட் இஸ் தட்?' என்ற கேள்வியோடு முடிகிறது குறும்படம்.
லூக்கா நற்செய்தியில் ஒரே அதிகாரத்தில் காணப்படும் மூன்று எடுத்துக்காட்டுக்களை இன்று நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்; காணமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா மற்றும் காணாமற்போன மகன். நம் எரிச்சல், நம் கோபம், நம் பிடிவாதம், நம் சுயநலம் அனைத்தினாலும் நாம் இன்றும் காணாமற்போய்க்கொண்டே இருக்கின்றோம். 'வாட் இஸ் தட்?' என்பதை இன்று நாம் கண்டுபிபடிக்க முயற்சி செய்யலாமா?
பவுலோ கோயலோ என்ற நாவல் ஆசிரியரின் 'த ஃபுளோயிங் ரிவர்' என்ற நூலில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வு. 2004ஆம் ஆண்டு ஜீன் 10ஆம் தேதி இணையதளத்தில் வெளிவந்த செய்தி. பைஜாமா அணிந்த ஒருவர் இறந்து போனார். அதற்கு என்ன? இறந்துபோன ஒருவர் பைஜாமா அணிந்திருப்பது ஒன்றும் புதிதல்லவே. நாம் நினைப்போம். பைஜாமா அணிந்திருந்த ஒருவர் தன் தூக்கத்தில் இறந்திருக்கலாம் அல்லது தன் உறவினர்கள் எல்லாம் சூழ்ந்து நிற்க மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது ஊரே நின்று வேடிக்கை பார்த்த ஒரு சாலை விபத்தில் இறந்திருக்கலாம்.
தொடர்ந்து செய்தி ஓடுகின்றது. இறந்து போனவர் அவரது அறையில் இருந்தார். ஆகையால் மருத்துவமனையிலோ, சாலையிலோ இறந்திருக்கும் வாய்ப்பு இல்லை. வீட்டில் என்றால் யாராவது கொலை செய்திருக்கலாமா? அதுவும் இல்லை. டோக்கியோ மக்கள் வாழப் பாதுகாப்பான நகரம் என்று 2003 ஆம் ஆண்டுதான் டைம் மேகசின் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தது. எந்த வன்முறையோ, எந்த இரத்தமோ, எந்தப் போராட்டமோ இல்லை.
இறந்தவரின் உடல் கட்டடத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் கிடந்த ஒரு கட்டடத்தை இடிக்கத் தொழிலாளர்கள் சென்றபோது அங்கே இறந்தவரின் உடலைக் கண்டுபிடிக்கின்றனர்.
அவர்கள் கண்டுபிடித்தது உண்மையில் உடலை அல்ல. கட்டடத்தொழிலாளர்கள் கட்டிடத்தை இடித்துக் கொண்டே வந்தபோது ஓர் அறையில் பைஜாமா அணிந்த எலும்புக்கூடு இருப்பதைக் காண்கின்றனர். அவருக்கு அருகில் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வெளியான செய்தித்தாள் இருந்தது. அந்த அறையில் தொங்கிய காலண்டரும் அதே தேதியைத்தான் காட்டியது. வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால், 20 ஆண்டுகளாக அவர் அந்த இடத்தில் இறந்து கிடந்தார். இந்தப் பூமிப்பந்திலிருந்து அவர் மறைந்து போனதை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரும் அவரைத் தேடவில்லை.
காணமற்போன மனிதரை கண்டுகொள்ள யாருமில்லை. காணமற்போவது ஒன்றும் புதிதல்ல. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் தன் வீட்டிலிருந்து பெட்டிக் கடைக்கு முறுக்கு வாங்கச் சென்றவர் இன்று வரை வீடு திரும்பவேயில்லை. சுற்றுலா செல்லும் இடத்தில், திருவிழாவில், காட்டுப்பயணத்தில், ஆற்றுக்குளியலில், கடல் நீச்சலில் எனக் காணாமற்போனவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் நம் உள்ளம் நம்மையறியாமல் கனத்து விடுகிறது.
மனிதர்கள் ஏன் காணாமற்போகிறார்கள்? ஒரு சில சிறுவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மேல் கோபப்பட்டு, தங்கள் வீட்டை விட்டு ஓடிக் காணமற்போவதுண்டு. இலங்கையின் உள்நாட்டுப்போரினால், சக மனிதர்களால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, சிதறடிக்கப்பட்டு காணாமற்போனவர்களின் கதறல்கள் இன்றும் எங்கோ கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மனப்போராட்டம், 'எனக்கென்று யார் இருக்கிறார்?' என்பதுதான். இந்தக் கேள்வியின் பின் இருப்பதும், 'நம்மை யாரும் கண்டுகொள்வதில்லையே' என்ற வலிதான்.
காணமற்போவது ஒரு வித்தியாசமான சொல்லாடல். இந்த வார்த்தைக்குப் பின் இரண்டு புலங்கள் இருக்கும், ஒன்று தொலைத்தவர் மற்றவர் தொலைந்து போனவர். இரு புலங்களிலும் வலி இருக்கும். இரு புலங்களிலும் தனிமை இருக்கும்.
லூக்கா நற்செய்தியின் 15ஆம் அதிகாரம் காணமற்போன ஆடு, காணாமற்போன நாணயம் (திராக்மா) மற்றும் காணாமற்போன மகன் என மூன்று எடுத்துக்காட்டுக்களைக் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.