2013-11-05 15:17:12

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்


நவ.05,2013. திருஅவையின் அங்கமாக மாறுவது திருவருளாகும், இது, நல்லவர்க்கும் தீயவர்க்கும் என அனைவருக்கும் கடவுள் விரும்பும் கொண்டாட்டத்திற்கான அழைப்பாகும் என்று இச்செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த அழைப்பு, கட்டணம் செலுத்தாத இலவச அழைப்பாகும், கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, மீட்பின் மகிழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்கப்பட்டவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை, இயேசுவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்குக் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று உரைத்தார்.
கிறிஸ்தவர்கள் விருந்தாளிகள் பட்டியலில் இருப்பதில் நிறைவு கண்டுவிடாமல் நம் ஆண்டவரின் கொண்டாட்டத்தில் முழுமையாய்ப் பங்கெடுக்க வேண்டுமென்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இதில் முழுமையாய்ப் பங்கெடுக்காவிட்டால் ஒதுக்கப்பட்டவர்கள்போன்று உணருவோம் என்றும் கூறினார்.
புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் இந்நாளைய முதல் வாசகம் மற்றும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் சாரமே அழைப்பு எனவும், நாம் அழைக்கப்பட்டால்மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறுவோம் எனவும், இதில் நுழைவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறினார்.
இந்தக் கொண்டாட்டம் ஒன்றிப்பின் கொண்டாட்டம் என்றும், நம் ஆண்டவர் தாராளத்தில் எல்லையில்லாதவர், அவர் எல்லாக் கதவுகளையும் திறக்கிறார், ஆண்டவரே, நான் உம்மிடம் வரமாட்டேன் என்று சொல்பவர்களைக்கூட புரிந்துகொண்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறார், ஏனெனில் அவர் கருணையுள்ளவர், ஆனால் உள்ளொன்றும் புறமொன்றும் வைத்துப் பாசாங்கு செய்பவர்களை அவர் விரும்புவதில்லை என்றும் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.