2013-11-05 15:29:42

40 விழுக்காட்டு சிரியா நாட்டினருக்கு உதவிகள் தேவை, ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் அமைப்பின் தலைவர்


நவ.05,2013. சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் ஏறக்குறைய 93 இலட்சம் மக்களுக்கு, அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்கு வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் அமைப்பின் தலைவர் வலேரி ஆமோஸ் கூறினார்.
வெளிநாடுகளின் உதவிகளை எதிர்நோக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 68 இலட்சமாக இருந்தது, இது தற்போது 93 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் ஆமோஸ் தெரிவித்தார்.
சிரியாவில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் தெரிவித்தார் ஆமோஸ்.
இதற்கிடையே, சிரியா அரசும் எதிர்தரப்புகளும் பேச்சுவார்த்தைகளை எப்படி அமைப்பது எனபதில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டுமென்று எதிர்தரப்புகள் வலியுறுத்திவரும்வேளை, பேச்சுவார்த்தைகளுக்கு எந்த முன்நிபந்தனையும் வைக்கக் கூடாது என்று சிரியா அரசு கூறி வருகிறது.
சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச்சில் சண்டை தொடங்கியதிலிருந்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20 இலட்சத்துக்கு மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.