2013-11-04 15:07:27

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியோடு வரவேற்போம்


நவ.04,2013. கடவுளின் ஒரு குழந்தையைக்கூட அவரது இதயத்திலிருந்தும் நினைவிலிருந்தும் அழிக்கக்கூடிய எந்தத் தொழிலோ அல்லது சமூக நிலையோ, எந்தப் பாவமோ அல்லது குற்றமோ கிடையாது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு, சக்கேயுவின் மனமாற்றத்தை விளக்கும் நற்செய்தி வாசகத்தை(லூக். 19:1-10) மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதே இல்லை, அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டே இருக்கிறார் என்று கூறினார்
சக்கேயு, உரோமையப் பேரரசுக்கு வரி வசூலித்துக் கொடுப்பவராக, வெறுக்கப்பட்ட உரோமைய ஆக்ரமிப்பாளர்க்கு நண்பராய், காணாமற்போன ஆடாய், ஒதுக்கி வைக்கப்பட்டவராய் இருந்தார், இவர் தனது மோசமான நிலையால் இயேசுவை நெருங்க இயலாதவராய் இருந்திருக்கக்கூடும், இவர் குள்ளமாக இருந்ததால் மரத்தின்மேல் ஏறி அந்தப் பக்கம் சென்ற இயேசுவைப் பார்க்க விரும்பினார் என்று, சக்கேயுவைப் பற்றி விளக்கினார் திருத்தந்தை.
சக்கேயு செய்த இச்செயல் சிரிப்புக்குரியதாய் இருந்ததாலும், பெருங்கூட்டத்தில் இயேசுவைச் சந்திப்பதற்கு இவர் மேற்கொண்ட இவரின் உள்ளார்ந்த செயலை இது வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, உருவத்தில் சிறியவராய், எல்லாராலும் ஒதுக்கப்பட்டவராய் இருந்த சக்கேயுவை இயேசு அழைத்து அவரது வீட்டில் உணவருந்தச் சென்றார் என்றும் கூறினார்.
சக்கேயு என்பதற்கு கடவுள் நினைக்கிறார் என்று பொருள், அந்த எரிக்கோ நகரத்தில் அத்தனை நல்ல மனிதர்கள் இருக்க, இயேசு இந்த வரி தண்டுபவரின் வீட்டுக்குச் சென்று, இன்று இவ்வீட்டுக்கு மீட்பு வந்தது என்று சொன்னார், ஏனெனில் இவர் காணாமற்போன ஆடு என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரத்தின்மீது இருந்த சக்கேயுவை இன்று நோக்குவோம், நமது மனச்சான்றை எதுவும் அழுத்திக்கொண்டிருந்தால் அதனை இறக்கி வைத்துவிட்டு, பல காரியங்கள் செய்திருந்தால் அவற்றை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, மன்னிக்கப்படுவோம் என்ற உணர்வில், ஒருவர் நமக்காகக் காத்திருக்கிறார் என நினைப்போம். மன்னிப்பதில் இயேசு ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு நம்மையும் பெயர் சொல்லி அழைக்கிறார், நான் இன்று உன் வீட்டில் தங்க வேண்டும் என்று நம் இதயத்தின் ஆழத்தில் சொல்வதை நாம் உற்று கேட்போம். அவரை மகிழ்வோடு வரவேற்போம், அவர் நம் வாழ்வை மாற்றுவார், கல்லான நம் இதயங்களை மாற்றி உணர்ச்சியுள்ள இதயங்களை நமக்கு அளிப்பார். தன்னலத்தினின்று விடுதலையளித்து நமது வாழ்வை அன்பின் கொடையாக மாற்றுவார், இயேசுவால் இதைச் செய்யமுடியும், இயேசுவை உற்றுநோக்குவோம் என, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.