2013-11-04 15:08:43

ஆசிய-ஐரோப்பாவை இணைக்கும் கடலடி இரயில் சுரங்கப்பாதை துருக்கியில் திறப்பு


நவ.04,2013. ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் விதமாக, துருக்கியில், கடலுக்கடியில் செல்லும், இரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில், 'Marmaray' என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த இரயில், இரண்டு தீவுகளை இணைக்கிறது; இந்த இரயில் சேவைமூலம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 75 ஆயிரம் பயணிகள் செல்ல முடியும். நாள் முழுவதும், 10 இலட்சம் பேர் பயணிக்க முடியும்.
கடந்த வாரம் நடந்த துவக்க விழாவில் பங்கேற்ற, துருக்கி அதிபர் அப்துல்லா குல், பிரதமர் ரீசேப் தயீப் எர்டோகன், ஜப்பான் பிரதமர் ஷிங்ஜோ அபே உள்ளிட்டோர், இந்தச் சுரங்க இரயிலில் பயணித்தனர்.
துருக்கி குடியரசாகி, 90 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், இந்த இரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியிலான இரயில் சேவையால், இஸ்தான்புல்லில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க முடியும் என்றும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு, 4 நிமிடத்தில் சென்றடைய முடியும், என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடலுக்கடியில் 13.6 கி.மீ., நீளம், 1.4 கி.மீ. ஆழம், 55 மீட்டர் சுற்றளவு கொண்ட இரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 2004ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால், அகழ்வாராய்ச்சி காரணமாக, இப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இரயில் பாதை அமைப்பதற்கான மொத்தச் செலவில், நான்கில் ஒரு பகுதி நிதியை, ஜப்பான் வழங்கியுள்ளது.
இந்த இரயில் பாதை அமைப்பு, முதன் முதலில் 1860ம் ஆண்டு ஒட்டமான் அரசின் சுல்தானால் திட்டமிடப்பட்டது.

ஆதாரம் : Mercopress








All the contents on this site are copyrighted ©.