2013-11-02 14:52:02

கடற்கொள்ளையர்கள், ஏழாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் 33 கோடியே 90 இலட்சம் டாலருக்கு அதிகமான பணம் பெற்றுள்ளனர், ஐ.நா.


நவ.02,2013. சொமாலிய மற்றும் ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதிக் கடற்கொள்ளையர்கள், ஏழாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பிணையல்தொகையாக பெற்றதில் 33 கோடியே 90 இலட்சம் டாலர் முதல் 41 கோடியே 30 இலட்சம் டாலர்வரை ஆதாயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
UNODC என்ற போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு ஐ.நா. அமைப்பு, உலக வங்கி, INTERPOL என்ற அனைத்துலக குற்றப்புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் இணைந்து முன்னாள் கடற்கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள், வங்கிகள், கடற்கொள்ளையரோடு தொடர்புடைய மற்றும்பிற நிறுவனங்களோடு நடத்திய நேர்காணல்களில் இவ்விபரங்கள் தெரியவந்துள்ளன.
கடற்கொள்ளையர்கள் பெற்றுள்ள பெருமளவான பிணையல்தொகைகள், நிலத்திலும் அவர்களின் நடவடிக்கைகளை வளர்ப்பதற்கு உதவியுள்ளன என்று UNODC அமைப்பின் அதிகாரி Tofik Murshudlu தெரிவித்தார்.
இந்தக் குற்றக் கும்பல்கள், ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதியின் உறுதியான தன்மைக்குத் தொடர் அச்சுறுத்தலாக இருந்துவருவதாகவும், இதனால் சுற்றுலாவும், மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன, உலகளாவியப் பொருளாதாரத்தில், ஆண்டுக்கு ஏறக்குறைய 180 கோடி டாலர் இழப்பையும் இக்கும்பல்கள் ஏற்படுத்துகின்றன எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.