2013-11-01 14:59:35

கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களைச் சிறப்பாக நினைவுகூர்வோம், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.01,2013. வன்முறைகளில், குறிப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களையும், தரமான வாழ்வுதேடிவரும் வழியில் தங்கள் உயிரை இழந்த நம் சகோதரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து செபிப்போம் என இம்மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாள்களில் கல்லறைகளைச் சந்திப்பவர்களோடு தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கல்லறைகளில் உறங்கும் அவர்கள் விசுவாசத்தின் அடையாளமாகவும், உயிர்ப்பின் நாளுக்காகக் காத்திருப்பவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், ஆப்ரிக்காவின் நைஜரில் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது உயிரிழந்த சகோதர சகோதரிகளை நினைத்து அமைதியில் செபிப்போம் என்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சம் திருப்பயணிகளிடம் சொல்லி அவர்களோடு சேர்ந்து சிறிதுநேரம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் மாலை 4 மணிக்கு உரோம் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் தான் திருப்பலி நிகழ்த்துவது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறந்த அனைவருக்காகவும், சிறப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களை இத்திருப்பலியில் சிறப்பாக நினைத்துச் செபிப்பதாகத் தெரிவித்தார்.
நைஜரிலிருந்து அல்ஜீரியா செல்லும் வழியில் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்ததால் குடிக்க நீரின்றி தாகத்தால் இவ்வியாழனன்று உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
சஹாரா பாலைவனத்துக்குக் கீழேயுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் குடிபெயரும் மக்களின் முக்கிய பாதையில் நைஜர் நாடு உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.