2013-11-01 15:05:20

2014ம் ஆண்டு பிப்ரவரியில் புதிய கர்தினால்கள் அவை


நவ.01,2013. புதிய கர்தினால்களை உருவாக்கும் Consistory என்ற கர்தினால்கள் அவை 2014ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, புனித பேதுருவின் தலைமைப்பீட விழாவன்று இடம்பெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது குறித்து கர்தினால்கள் ஆலோசனை அவைக்கும், ஆயர்கள் மாமன்ற அவைக்கும் ஏற்கனவே அறிவித்துள்ளார் எனத் தெரிவித்த திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இப்படி ஏற்கனவே அறிவித்திருப்பது, உலகெங்கும் இருக்கின்ற கர்தினால்களை ஈடுபடுத்தும் மற்ற கூட்டங்களைத் திட்டமிட உதவும் என்று கூறினார்.
அதேநேரம், திருஅவையின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யும் 15 பேர் கொண்ட கர்தினால்கள் அவைக் கூட்டம் வழக்கம்போல் பிப்ரவரியில் நடைபெறும் எனவும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
தற்போது கத்தோலிக்கத் திருஅவையிலுள்ள மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 201(அக்.19, 2013). இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 109. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவைக்கு அதிகபட்சம் 120 கர்தினால்கள் தேவை என திருஅவை சட்டம் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.