2013-10-31 16:00:40

திருத்தந்தை பிரான்சிஸ்: இயசுவின்மீது நாம் கொண்டுள்ள அன்பு எத்தகையது?


அக்.31,2013. இயசுவின்மீது நாம் கொண்டுள்ள அன்பு, திருத்தூதர் பவுல் அடியார் கொண்டிருந்த அன்பைப்போல் உள்ளதா அல்லது எருசலேம் நகர், இயேசுமீது காட்டிய அன்பைப்போல் உள்ளதா என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எழுப்பினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கல்லறையுள்ள பீடத்தில் ஒவ்வொரு வியாழனன்றும் போலந்து நாட்டு மக்கள் கூடிவந்து திருப்பலி நிறைவேற்றி வருகின்றனர்.
அக்டோபர் 31, இவ்வியாழனன்று இச்சிற்றாலயத்தில் கூடியிருந்த மக்களுக்கு காலை திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகம், லூக்கா நற்செய்தி ஆகிய நூல்களின் வாசகங்களை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்துவின்மீது பற்றுகொண்ட பவுல் அடியார் தன் சொந்த பாதுகாப்பு அனைத்தையும் துறப்பதற்குத் துணிந்ததை எடுத்துக்கூறி, அத்தகைய அன்பு நம்மிடம் விளங்குகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
இதற்கு மாறாக, கிறிஸ்துவின் உள்ளத்தை வேதனைப்படுத்திய எருசலேம் நகரின் மக்களைப்போல, நாமும் கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள அன்பை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறோமா என்பதையும் கேள்வியாக முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் நாம் அனைவரும் புனித பவுல் அடியாரைப் போன்று உறுதியான அன்பில் வளர வேண்டுவோமாக என்று சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.