2013-10-31 16:03:10

'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் பொன்விழாவை புனித பூமியில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது - கர்தினால் டர்க்சன்


அக்.31,2013. போரற்ற சூழல் மட்டும் அமைதியைக் கொணராது, மாறாக, மனிதர்களுக்குரிய அடிப்படை மாண்பு உறுதி செய்யப்படும்போதுதான் இவ்வுலகில் அமைதி நிரந்தரமாகக் குடிகொள்ளும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'உலகில் அமைதி' என்ற தலைப்பில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட சுற்றுமடலின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, எருசலேமில் இயங்கும் சலேசிய பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், இவ்வியாழனன்று உரையாற்றிய, திருப்பீடத்தின் நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
1977ம் ஆண்டு, எருசலேம் விவிலிய மையத்தில் தான் பயின்ற அனுபவத்தை மகிழ்வுடன் நினைவுகூர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், 'உலகில் அமைதி' சுற்றுமடலின் பல்வேறு உயர்ந்த அம்சங்களை விளக்கிக் கூறினார்.
'நல்மனம் கொண்ட அனைவருக்கும் அமைதி' என்று வானதூதர்கள் முதன் முதல் அறிவித்த புனித பூமியில், 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் பொன்விழாவைக் கொண்டாடுவது, மிகவும் பொருத்தமானது என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
'பனிப்போர்' என்று அழைக்கப்பட்ட 1963ம் ஆண்டின் நிலையம், 2013ம் ஆண்டின் நிலையம், ஆயுதக் குவிப்பைப் பொருத்தவரை அதிகமாக மாறவில்லை என்பதைக் குறித்து, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.
ஆயுதங்களின் எண்ணிக்கையை உலக அரசுகள் குறைத்து வருவதாகக் கூறினாலும், ஆயுதங்களின் சக்தியைக் கூட்டிவருவது, அழிவுக்கு இட்டுச் செல்லும் உறுதியான வழி என்று, திருஅவை கூறிவரும் கருத்துக்களை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.