2013-10-30 16:29:48

கீழை வழிபாட்டு முறை திருஅவைத் தலைவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் மாதம் சந்திப்பார்


அக்.30,2013. சிரியா, ஈராக், மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றிவரும் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையர்களையும், பேராயர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற நவம்பர் மாதம் திருப்பீடத்தில் சந்திப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் கீழை வழிபாட்டு முறை பாப்பிறை மையத்தில், கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Leonardo Sandri அவர்கள், இச்செவ்வாயன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் முடிவுற்றபின் 50 ஆண்டுகள் கழித்து, கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுடன் உள்ள உறவு பற்றி பேச, நவம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய உரோம் நகரில் இக்கூட்டம் நடைபெறும் என்று கர்தினால் Sandri அவர்கள் அறிவித்தார்.
நவம்பர் 21ம் தேதி, இக்கூட்டத்தில் நிகழும் விவாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது, இக்கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்றும் கர்தினால் Sandri அவர்கள் தெரிவித்தார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமையில், 2009ம் ஆண்டு நடைபெற்ற கீழை வழிபாட்டு முறை ஆயர்களின் கூட்டத்திற்குப் பின், இவ்வாண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.