2013-10-30 16:31:46

கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் : எல்லைகளைக் காப்பதைவிட, உயிர்களைக் காப்பதே அவசியம்


அக்.30,2013. அக்.30,2013. ஐரோப்பிய கண்டத்திற்குள் வரமுயலும் அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களுக்குச் சட்டரீதியான தீர்வுகளை வழங்க ஐரோப்பிய அரசுகள் முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது இயேசு சபையின் JRS என்றழைக்கப்படும் அகதிகள் பணி அமைப்பு.
இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கருகே இடம்பெற்ற படகு விபத்தில், 366 குடியேற்றதாரர்கள் உயிரிழந்துள்ளது, ஐரோப்பாவின் குடியேற்றதாரர் குறித்த கொள்கைகளின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறிய இயேசுசபை அகதிகள் பணி அமைப்பு, இவ்விபத்து நிகழ்ந்தது முதல், லாம்பெதூசா மக்களும் அக்ரிசெந்தோ மறைமாவட்டமும் அங்கு ஆற்றிவரும் பெரும்பணிகள், ஐரோப்பிய அரசுகளுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் அமைப்பும், குடியேற்றதாரர்களின் சார்பில் ஐரோப்பிய தலைவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சொந்த நாட்டில் சுதந்திரமின்மையும், நல்வாழ்வை நோக்கிய வேட்கையும் லாம்பெதூசாவில் நிகழ்ந்தது போன்ற விபத்துகளுக்கு மூலகாரணமாக அமைகின்றன என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் ஆப்ரிக்கக் கண்டத்தின் ஆயர்கள்.
ஆப்ரிக்கக் கண்டத்தின், குறிப்பாக, கிழக்கு ஆப்ரிக்காவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைகளால் மக்கள் சுதந்திரம் தேடி ஐரோப்பாவிற்குக் குடிபெயர தங்கள் வாழ்வையே பிணையமாக வைத்து கடல்பயணம் மேற்கொண்டுவருகின்றனர் என தங்கள் கவலையையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.