2013-10-30 16:32:47

இதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை, குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவக் கருவி


அக்.30,2013. இதய இரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை, குறைந்த செலவில் கண்டறியக் கூடிய ஒரு கருவியை, சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான நலவாழ்வு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் உருவாக்கியுள்ளது.
குறைந்த செலவில் நவீன மருத்துவச் சாதனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மையம், “ஆர்ட்சென்ஸ்” (Heart Sense) என்ற பெயரில் இக்கருவியை உருவாக்கியுள்ளது.
தற்போதைய நடைமுறையில் இத்தகைய ஆய்வுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் சூழலில், இந்தப் புதியக் கருவியின் மூலம் ஆயிரம் ரூபாய்க்குள் ஆய்வை முடித்துவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ள இந்தப் புதியக் கருவியில் சில நிமிடங்களில் சோதனை முடிந்துவிடும். இதுகுறித்து ஐ.ஐ.டி. நலவாழ்வு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்கள் மோகனசங்கர், ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் கூறியது:
‘‘குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை கண்டறிய உதவும் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. அடுத்த கட்டமாக, இக்கருவியை கையடக்கக் கருவியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “இன்றையச் சூழலில் மருத்துவம்- தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த படிப்புகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் அவசியம். சென்னை ஐ.ஐ.டி.யில், மருத்துவம், கட்டுமானம், நீர், மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.