2013-10-29 15:58:47

உலக வங்கித் தலைவர் : ஏழ்மைக்கு எதிரான திருத்தந்தையின் குரலுக்கு இணை எதுவுமில்லை


அக்.,29,2013. உலகில் ஏழ்மை ஒழிப்பு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் கருத்துக்கள், உலக வங்கியின் நோக்கங்களோடு ஒத்திணங்கிச் செல்வதால் இருதரப்பினரும் ஒன்றிணைந்து உழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலகவங்கித் தலைவர் எடுத்துரைத்தார்.
இத்திங்களன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim அவர்கள், இருதரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்து, சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்புப் பங்காற்றமுடியும் என்பது குறித்து திங்கள் சந்திப்பின்போது திருத்தந்தையுடன் விவாதித்ததாகவும் கூறினார்.
எழ்மைக்கு எதிராக திருத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிப்பதை அவர் திருத்தந்தையாக பதவியேற்ற நாளிலிருந்தே காணமுடிகிறது என்ற Jim Yong Kim அவர்கள், திருத்தந்தை அவர்களுக்கு இணையான ஒரு குரலை உலகத்தலைவர்கள் மத்தியில் காணமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
'வளர்ச்சி என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும், பணத்தை மையப்படுத்தி அல்ல’ என்ற திருத்தந்தையின் கருத்தே தன்னுடைய கருத்து எனவும் கூறினார் உலக வங்கித்தலைவர்.

ஆதாரம் : Sydney Morning Herald








All the contents on this site are copyrighted ©.