2013-10-28 15:41:08

செபமே ஒரு குடும்பத்தை உறுதியாக வாழவைக்கும் - திருத்தந்தை


அக்.28,2013. செபமே ஒரு குடும்பத்தை உறுதியாக வாழவைக்கும் என்றும், குடும்பமாய்ச் செபிப்பது மிக எளிதான ஒரு முயற்சி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகருக்கு வந்திருந்த பல்லாயிரம் குடும்பங்களுக்குக் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, அக்டோபர் 26, 27, இச்சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருநாட்கள், அகில உலகக் குடும்ப விழா ஒன்று திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையினரால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இவ்விழாவின் சிகரமாக, இஞ்ஞாயிறு காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், உலகின் பல நாடுகளிலிருந்தும், 2 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.
இத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரையில், குடும்பம் செபிக்கிறது, குடும்பம் தன் நம்பிக்கையைப் பேணுகிறது, குடும்பம் மகிழ்வை அனுபவிக்கிறது என்ற மூன்று கருத்துக்களைத் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்ற பரிசேயர், வரிதண்டுபவர் என்ற உவமையை (லூக்கா 18: 9-14) எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, பரிசேயரின் வேண்டுதல் தற்பெருமையில் தோய்ந்திருந்ததால், இறைவனை நோக்கி மேலெழ முடியாமற்போயிற்று என்றும், வரிதண்டுபவர் எழுப்பிய பணிவான 'மன்றாட்டு, முகில்களை ஊடுருவிச் சென்று, ஆண்டவரை அடைந்தது' (சீராக் 35:17) என்றும் கூறினார்.
குடும்பமாகச் சேர்ந்து உணவருந்தும்போது 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே' போன்ற எளிமையான செபத்தைச் சொல்வதையும், குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என்று அனைவரும் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்பதையும், எடுத்துக்காட்டாகக் கூறி, செபிப்பது மிக எளிதான ஒரு பழக்கம் என்பதை திருத்தந்தை விளக்கினார்.
குடும்பங்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணி வளர்ப்பதன் வழியாக, இவ்வுலகிற்குத் தலைசிறந்த சாட்சிகளாக வாழமுடியும் என்பதையும், திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

'உங்கள் அனைவருக்கும் ஒரு வீட்டுப்பாடம் தர விழைகிறேன் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் குடும்பங்களில் உண்மையான மகிழ்ச்சி நிலவுகிறதா என்ற கேள்விக்கு நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விடை தேடவேண்டும் என்பதே தான் அனைவருக்கும் வழங்கும் 'வீட்டுப்பாடம்' என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.